செய்திகள்

கச்சநத்தம் கிராமத்தில் மாணவர்களே இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்

Published On 2018-06-26 17:46 GMT   |   Update On 2018-06-26 17:46 GMT
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் மாணவர்கள் வருகை இல்லாத பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மானாமதுரை:

மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கச்சநத்தம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் நாளடைவில் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 20-க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருந்து வந்தது. கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்த எந்தவித விழிப்புணர்வு நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது மாணவர் சேர்க்கை குறைந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் 11 மாணவ-மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர்.

இதற்கிடையில் கச்சநத்தம் கிராமமக்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பள்ளியில் பயின்ற 11 மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளி மாற்றுச்சான்றை வாங்கி வேறு பள்ளியில் சேர்த்துவிட்டனர். பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் கச்சநத்தம் தொடக்கப்பள்ளியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதுகின்றனர். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

மாணவ-மாணவிகள் யாருமே வராத நிலையில் பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டும் தினசரி வந்து பள்ளியை திறந்து வைத்து வெறுமனே உட்கார்ந்துவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்று வருகின்றனர். எனவே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை சமாதானம் செய்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
Tags:    

Similar News