சென்னையில் சேட்டிலைட் விமான முனையம்:தமிழக நீர்வளத் துறையிடம் ஆய்வு அறிக்கை தாக்கல்
- 4 வழி மேம்பாலம் மற்றும் முனைய கட்டுமானத்திற்கான நிதியை இந்திய விமான ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.
- அடையாறு ஆற்றின் வழியாக சென்று முனையத்தின் நுழைவு பகுதியை அடையும்.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் செயற்கைக்கோள் முனையம் கட்டுமானம் மற்றும் அதற்கான உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து செயல்படுத்தும் வகையில் இந்திய விமான நிலைய ஆணையம் நீர்வளத் துறையிடம் ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.
புதிய திட்டமான சாட்டிலைட் முனையத்திற்கு இணைப்பு வழங்க கூடுதல் நிலம் வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்ததை தொடர்ந்து தற்போதைய நிலத்திலேயே உயர்மட்ட மேம்பாலம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையம் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை தொடங்கும் இந்த மேம்பாலம் தண்டலம் பகுதியில் உள்ள மாதவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் தொடங்கி அடையாறு ஆற்றின் வழியாக சென்று முனையத்தின் நுழைவு பகுதியை அடையும்.
அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தூண்கள் மழைக்காலங்களில் அல்லது வெள்ள காலத்தில் நீரோட்டத்தை தடுக்குமா என்பதை ஆய்வு செய்யுமாறு மாநில அரசு கேட்டிருந்தது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்வள மையம் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையை தற்போது இந்திய விமான ஆணையம் நீர்வளத் துறையிடம் ஒப்படைத்து உள்ளது.
நீர்வளத்துறை மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன் இந்த 4 வழி மேம்பாலம் மற்றும் முனைய கட்டுமானத்திற்கான நிதியை இந்திய விமான ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.
பரந்தூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர இன்னும் 4, 5 ஆண்டுகள் ஆகும் என்பதால் தற்போதைய சென்னை விமான நிலையத்தில் நெரிசலை குறைக்க இந்த சாட்டிலைட் முனையம் திட்டம் மிகவும் அவசியமானது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவர திட்டமிடப்பட்டது. நீண்ட காலமாக தாமதமடைந்து வந்தது. 2024-ல் இதனை மீண்டும் இந்திய விமான நிலையம் கையில் எடுத்த பிறகு தற்போது வேகம் பெற்றுள்ளது.