செய்திகள்

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 மீனவர்கள் கைது

Published On 2018-06-23 12:14 GMT   |   Update On 2018-06-23 12:14 GMT
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 2 மீனவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதை தடுக்கவும், போராளிகள் ஊடுருவலை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இருந்தபோதிலும் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருதல், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்லுதல் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, தோப்புத்துறை ஆகிய இடங்களில் சுங்க இலாகா அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் ரோந்து செல்லும் நவீன படகுகள் பழுதாகி விட்டன. எனவே சுங்க இலாகாவினர் ரோந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வேதாரண்யம் பகுதியில் கடலோர காவல் படை, கப்பல் படை அலுவலங்களும் செயல்பட்டு வருகின்றன. இவர்களின் கண்காணிப்பை மீறி கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்துள்ள ஆறுக்காட்டுத்துறையில் இருந்து இலங்கைக்கு கடத்த கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலு, இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், மும்தாஜ் பேகம் மற்றும் போலீசார் ஆறுக்காட்டுத்துறைக்கு விரைந்து சென்று வெற்றிவேல் என்ற மீனவரின் உறவினருக்கு சொந்தமான கொட்டகையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 20 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைபற்றபட்டது. அதில் 20½ கிலோ கஞ்சா இருந்தது.

இது தொடர்பாக போலீசார் வெற்றிவேல் (வயது 41), ராஜேந்திரன் (56) ஆகிய 2 மீனவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கஞ்சா வைக்கப்பட்டிருந்ததா? இதில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

Tags:    

Similar News