உலகம்

எதிர்பார்த்தவாறே மியான்மரில் ஆட்சியை கைப்பற்றும் ராணுவ ஆதரவுப் பெற்ற யுஎஸ்டிபி!

Published On 2026-01-26 22:00 IST   |   Update On 2026-01-26 22:00:00 IST
  • ராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.
  • நாட்டின் மொத்த 330 நகரங்களில், 67 நகரங்களில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் டிசம்பர் 28, ஜனவரி 11 மற்றும் ஜனவரி 25 என மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவ ஆதரவுப் பெற்ற யூனியன் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி வெற்றிப் பெற்றதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது, மாற்றுக்கருத்துக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டது, மேலும், நாடாளுமன்றத்தின் 25% இடங்கள் ராணுவத்திற்காக தானாகவே ஒதுக்கப்பட்டிருந்தது போன்றவற்றால் இந்தக் கட்சியின் வெற்றி என்பது முன்னரே எதிர்பார்க்கபட்டதுதான் என கூறப்படுகிறது. 

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் (NLD) பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற சில மாதங்களில் 2021-ல் மியான்மரில் ராணுவப் புரட்சி வெடித்தது. இதனைத்தொடர்ந்து இராணுவத்தால் ஆட்சி கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி, தற்போது சிறையில் உள்ளார்.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு நடந்த தேர்தலில் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. மேலும் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடையும் விதிக்கப்பட்டது. நாட்டின் மொத்த 330 நகரங்களில், 67 நகரங்களில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இதனால் 664 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தின் அசல் இடங்களின் எண்ணிக்கை 586-ஆகக் குறைந்தது.

தேர்தலில் 57 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4,800-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும், ஆறு கட்சிகள் மட்டுமே நாடு தழுவிய அளவில் போட்டியிட்டன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி கட்டத் தேர்தலில், கீழவைக்கான மொத்தம் 61 இடங்களில் 57 இடங்களை USDP கட்சி வென்றுள்ளதாக அந்தக் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலவை மற்றும் பிராந்திய சட்டமன்றங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து அந்த கட்சிக்கு குறைந்தபட்சம் 290 இடங்கள் கிடைக்கும். இதன்படி, ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 166 இடங்களுடன் சேர்த்து, இவ்விரண்டும் 450-க்கும் அதிகமான இடங்களைக் கொண்டிருக்கும். இது அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 294 இடங்களை விட மிக அதிகமாகும். அனைத்து இடங்களுக்குமான இறுதி முடிவுகள் இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களும் ராணுவத்தால் நியமிக்கப்பட்டவர்களும் மூன்று வேட்பாளர்களை முன்மொழிவார்கள்; பின்னர் அவர்களில் ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுப்பார்கள். மற்ற இருவரும் துணை அதிபர்களாவார்கள். தற்போதைய ராணுவ அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங், அதிபர் பதவியைப் பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்தத் தேர்தலை ஒரு "ஏமாற்று வேலை" (sham) என்றும், இராணுவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான முயற்சி என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News