செய்திகள்

உண்ணாவிரதம் இருக்கும் அரசு ஊழியர்களுடன் தினகரன் சந்திப்பு

Published On 2018-06-13 07:35 GMT   |   Update On 2018-06-13 07:35 GMT
அரசு ஊழியர்-ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் எழிலகத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரன் வந்தார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னை:

அரசு ஊழியர்-ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் எழிலகத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரன் வந்தார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு ஊழியர்-ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானது. 3 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களை முதல்வர், அமைச்சர்கள், சந்திக்கவில்லை. இன்றைக்கு குருட்டு அரசாங்கம் நடந்து வருகிறது. ஒரு தலைகீழான அரசாங்கத்தில் மக்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து அரசியலில் இருக்க விரும்புகிறவர்கள் மக்கள் பணியை ஆற்ற நினைப்பவர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்வார்கள். இவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. இந்த அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று கூறுகிறார்கள். சட்டியில் கொண்டு வந்து சேர்ப்பது அரசின் வேலை. ஆனால் இவர்கள் சட்டியில் இருந்து சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.


பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாரையும் பலி கொடுக்க தயாராகி விட்டார்கள். ஈவு இரக்கம் இவர்களுக்கு இல்லை. அதனால் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருப்பதை கைவிட வேண்டும். உங்களுக்கு இந்த அரசிடம் நியாயம் கிடைக்காது. இந்த ஆட்சி நீடிக்கப் போவதில்லை. நான் இதை அரசியலுக்காக பேசவில்லை. உங்கள் வாக்குகளுக்காக பேசவில்லை. உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. அதனால் எப்போது தேர்தல் வந்தாலும் ஆட்சி அமைப்போம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். ஆட்சி மாற்றம் ஏற்படும்.

மக்கள் பிரச்சனையை தீர்க்க முன் வரமாட்டார்கள். போராட்டம் முற்றி உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று இழப்பீடு வழங்குவார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் தீர்ப்பு எங்களுக்கு நியாயமாகவும், சாதகமாகவும் அமையும்.

காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணியை சட்டசபையில் இருந்து வெளியேற்றிய சம்பவம் ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்து இருக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

டி.டி.வி.தினகரனுடன் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, செந்தமிழன் மற்றும் வெற்றிவேல், வி.எஸ்.பாபு, சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். #TTVDhinakaran #JactoJio
Tags:    

Similar News