செய்திகள்

காவிரி நீர் பிரச்சனை- கமல் முயற்சிக்கு ரஜினி ஆதரவு

Published On 2018-06-05 06:40 GMT   |   Update On 2018-06-05 06:40 GMT
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்தது நல்ல முயற்சி என்றும் அதில் தவறு இல்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Rajinikanth #KamalHaasan #CauveryIssue
சென்னை:

காவிரி நதிநீர் பிரச்சனை தமிழகம்-கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.

இதன் பிறகாவது கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் வீம்பு பிடிக்காமல் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் காவிரி நீர் விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண முடியும் என்று கூறி வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இப்போது அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது காவிரி நீர் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இதன் பின்னர் குமாரசாமி, கமல் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவை விரும்புவதாகவும், தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார் என்றும் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

அவருடன் இணைந்து பேட்டி அளித்த கமலும் 2 மாநிலங்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் காவிரி பிரச்சனையை அணுகி தீர்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பேச்சு எனதுஇதயத்தை நிரப்பி விட்டது என்றும் தெரிவித்தார்.

கமலின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனும் கமலின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடு கமல் செயல்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில் கமலின் இந்த முயற்சியை ரஜினி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-

கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்தது நல்ல முயற்சி. அதில் தவறு இல்லை. பேச்சு தொடர வேண்டும். அவர்கள் ஒன்றும் எதிரி இல்லை. பெரிய பெரிய காரியங்கள் கூட பேசித்தான் தீர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #KamalHaasan #CauveryIssue
Tags:    

Similar News