செய்திகள்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2018-05-27 18:10 IST   |   Update On 2018-05-27 18:10:00 IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #thoothukudifiring

கடலூர்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு கடலூர் வந்தேன்.

விழுப்புரத்தில் இன்று பாரதீய ஜனதா சார்பில் சமதர்ம எழுச்சி மாநாடு நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கே:- ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக மத்திய அரசு ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளதா?

ப:- மாநில அரசு விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளது. அதன் பிறகு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

கே:- தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதே?

ப:- கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பலமுறை தெரிவித்து விட்டேன்.

இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் எந்தஒரு முன்னேற்றமும் இருக்கக்கூடாது என பயங்கரவாதிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஆரம்பத்திலேயே மாநில அரசு தடுத்து நடவடிக்கை எடுத் திருக்க வேண்டும்.

ஆனால், ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடந்து வருவது என கூறி வருகிறார். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் கம்பெனி தொடங்குவதற்கு தி.மு.க.தான் காரணம். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதிதான் தொடங்கி வைத்தார்.


மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மத்திய மந்திரி ஆ.ராசா இதற்கு அனுமதி கொடுத்தார். இதன் மூலம் தமிழகத்துக்கு தி.மு.க. துரோகம் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக மாநில அரசு கொடுக்கும் பரிந்துரையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

உலக அளவில் உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய நாட்டின் மதிப்பு கூடி இருக்கிறது. இதில் விவசாயத்தில் இந்தியா சாதனை புரிந்துள்ளது. மேலும் எல்லா வகையிலும் இந்திய அரசு முன்னேற்ற பாதையில் செல்கிறது.

கே:- தமிழகத்தில் 400 விவசாயிகள் இறந்துள்ளனரே?

ப:- தமிழக அரசு இது சம்பந்தமாக எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு சொல்கிற எண்ணிக்கையும், மக்கள் சொல்கின்ற எண்ணிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #thoothukudifiring

Tags:    

Similar News