செய்திகள்

அரசு பஸ்சில் நர்சை தரக்குறைவாக விமர்சித்த கண்டக்டர்

Published On 2018-05-19 17:01 GMT   |   Update On 2018-05-19 17:01 GMT
அரசு பஸ்சில் நர்சை தரக்குறைவாக பேசிய கண்டக்டரால் பயணிகள் முகம் சுளித்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளபட்டியை சேர்ந்தவர் பிச்சை. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ்சில் பணியில் இருந்தார். பெரியகுளம் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கும் பிரேமா தேனியில் ஏறினார்.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைசி இருக்கையில் அமர்ந் திருந்தார். பெரியகுளம் வரும் வரைக்கும் கண்டக்டர் அங்கு வராததால் லட்சுமிபுரத்தில் பிரேமா கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார்

இதனால் கண்டக்டர் பிச்சை தரக்குறைவான வார்த்தைகளால் நர்சை திட்டினார். தேனியில் பஸ் ஏறி இவ்வளவு நேரம் எதற்காக டிக்கெட் எடுக்காமல் இருந்தாய் என கேவலமாக திட்டினார்.

சக பயணிகள் கண்டக்டரிடம் எதற்காக அந்த பெண்ணை இப்படி திட்டுகிறீர்கள்? என கேட்டதற்கு அவர்களையும் கண்டக்டர் வசை பாடினார். இது குறித்து பயணிகள் கண்டக்டரின் பேச்சை செல்போனில் பதிவு செய்தனர். மேலும் பெரியகுளம் வந்ததும் பஸ்சை போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர். ஆனால் நர்ஸ் பிரேமா தனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டதால் தான் செல்வதாக கூறி சென்று விட்டார். ஆனால் மற்ற பயணிகள் சம்மந்தப்பட்ட கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News