சென்னையில் பீகார் குடும்பம் கொலை.. வெறுப்பை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிக்கை
- இந்தக் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சக புலம்பெயர் தொழிலாளர்களான சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாக்கூர் மற்றும் விகாஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்.
சென்னை தரமணியில் கௌரவ் குமார் என்ற பீகார் மாநில இளைஞர், அவரது மனைவி, குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை விவகாரம் தொடர்பாக சிகந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட பீகாரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பரவி வரும் பொய் செய்திகளை நம்பவேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அவர்கள் மீதான வெறுப்புணர்வே இந்தக் கொலைக்குக் காரணம் என்றும் ஒரு சில சமூக வலைதளப் பதிவுகள் தவறான பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. இது மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் நோக்கில் பரப்பப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கௌரவ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்தது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சக புலம்பெயர் தொழிலாளர்களான சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாக்கூர் மற்றும் விகாஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குள் இருந்த தனிப்பட்ட விரோதம் இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர். தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடந்த மோதலை, மாநிலத்தின் பாதுகாப்போடு தொடர்புபடுத்திப் பேசுவது முற்றிலும் தவறானது.
சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் வெறுப்புணர்வைத் தூண்டுவது சட்டப்படி குற்றமாகும்.
எந்தவொரு செய்தியையும் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை ஆராயுங்கள். பொய் செய்திகளைத் தவிப்போம்! வெறுப்புணர்வை வேரறுப்போம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.