பெற்றோர்களின் கவனத்திற்கு... பொன் மகன் சேமிப்புத் திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
- இந்த திட்டத்தில் அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சம் ஆகும்.
- இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு 2015ம் ஆண்டு தொடங்கியது. பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெற்றோர்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.
பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம் இருப்பதை போலவே ஆண் குழந்தைகளுக்கும் சேமிப்பு திட்டம் ஒன்று உள்ளது. ஆண் குழந்தைகளுக்கான 'பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்தை செப்டம்பர் 2015-ல் தொடங்கப்பட்டது.இது ஒரு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும்.
10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் தபால் நிலையத்தில் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்ட கணக்கை தொடங்கி சேமிக்க தொடங்கலாம்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சம் ஆகும். இந்த திட்டத்தில் அவ்வப்போது வட்டி விகிதம் மாற்றப்பட்டாலும் ஒவ்வொரு வருடமும் 7% க்கும் குறையாமல்தான் வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் பணம் மற்றும் வட்டி உட்பட முழுத் தொகையும் மேஜர் ஆனவுடன் ஆண் குழந்தைக்கு வழங்கப்படும். வருமான வரி விலக்கில் 80சி வரம்பின் கீழ், சேமிப்பு மற்றும் முதலீட்டின் வகைப்படி அதிகபட்சம் ரூ.1,50,000 வரை ஒரு நிதியாண்டுக்கு வரி விலக்கு சலுகையும் உண்டு.
இந்த திட்டத்தில் மாதம் ரூ.1,000 செலுத்தினால், 15 ஆண்டுகளில் ரூ.1,80,000 செலுத்தியிருப்போம். அதற்கு வட்டியாக தோராயமாக ரூ.1,35,500 கிடைக்கும். முதிர்வுத் தொகையாக ரூ.3,15,500 பணம் 15 ஆண்டுகளில் கிடைக்கும்.