செய்திகள்

கண்ணகி நகரில் இன்று காலை 2 வாலிபர்கள் குத்திக் கொலை

Published On 2017-08-07 15:34 IST   |   Update On 2017-08-07 15:34:00 IST
கண்ணகி நகரில் ஒரே நாளில் 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர்:

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திப் நாத் (25). கண்ணகி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி காரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை அவர் பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். காரப்பாக்கம் பாலம் அருகே சென்ற போது ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். திடீரென அவர்கள் சந்திப் நாத்தை கத்தியால் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

பின்னர் சந்திப் நாத்தின் செல்போனை எடுத்துக் கொண்டு கொலை கும்பல் தப்பி சென்றுவிட்டனர். கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கண்ணகி நகர் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு 2-வது மாடியில் வசித்து வந்தவர் தினேஷ் (19). இன்று காலை அவர் அதே பகுதியில் நண்பர்களுடன் இருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த நண்பர்கள் தினேசை தாக்கி கத்தியால் குத்தினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். கஞ்சா விற்பனை தகராறில் இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த டோரிமணியை பிடித்து விசாரித்து வருகிறார்கள். ஒரே நாளில் 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News