உள்ளூர் செய்திகள்

கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம்

நெல்லையில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் பெற தயாராகிறது

Published On 2023-01-22 08:39 GMT   |   Update On 2023-01-22 08:39 GMT
  • மத்திய அரசின் தேசிய தரக்காப்பீட்டு சான்றிதழானது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலையையும் தீர்மானிக்கிறது.
  • பாளை பர்கிட்மாநகர் மற்றும் கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளது.

நெல்லை:

மத்திய அரசின் தேசிய தரக்காப்பீட்டு சான்றிதழானது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலையையும் தீர்மானிக்கிறது. இதற்காக மாநில அளவிலான ஆய்வு குழுக்கள் ஆண்டுதோறும் ஆரம்ப சுகாதார நிலையங் களை ஆய்வு செய்யும்.

ஊக்கத்தொகை

இந்த சான்றிதழை பெறுவதன் மூலம் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த ரொக்க விருதில் 25 சதவீதம் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

4-வது ஆண்டில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு குழு, தேசிய தர காப்பீட்டு சான்றிதழுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சான்றிதழை புதுப்பித்தல் மற்றும் உயர் உதவிக்காக ஆய்வு செய்யும்.

தரக்குழு ஆய்வு

அதன் அடிப்படையில், கடந்த மாதம் 19 மற்றும் 20-ந்தேதிகளில் தர காப்பீட்டு குழுவானது நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகர் அருகே உள்ள பர்கிட் மாநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தது. தொடர்ந்து அதே மாதத்தில் 28 மற்றும் 30-ந்தேதிகளில் நெல்லையை அடுத்த நடுக்கல்லூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அந்த குழுவினர் அங்கு உள்ள வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் அங்குள்ள ஆய்வகங்கள், அறுவை சிகிச்சை கூடங்கள், மருந்தகம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கூடங்களை ஆய்வு செய்தனர்.

70 சதவீதம் மதிப்பெண்

ஆய்வுக்கு பின்னர் நெல்லை மாவட்ட தர நிர்ணய மருத்துவ அலுவலர் பிரவின் குமார் கூறியதாவது:-

பாளை பர்கிட்மாநகர் மற்றும் கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளது. இதனால் அவை இரண்டும் தேசிய தர காப்பீட்டு சான்றிதழை பெற தயாராக உள்ளன. எதிர்காலத்தில் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இதே போன்ற ஆய்வுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.

தற்போது பர்கிட் மாநகருக்கு ரூ.7 லட்சமும், கல்லூர், திசையன்விளைக்கு தலா ரூ.10 லட்சமும் கிடைத்துள்ளது. இப்போது கிடைக்க உள்ள தரச்சான்றிதழ் மேலும் வசதிகளை சேர்க்க கூடுதலாக ரூ.3 லட்சம் கிடைப்பதை உறுதி செய்யும்.

வைராவிகுளம், ரெட்டியார்பட்டி, பணகுடி, கீழநத்தம், வன்னிகோனேந்தல், நவ்வலடி, கல்லிடைக்குறிச்சி, ஏர்வாடி மற்றும் மன்னார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதேபோல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News