டீ கடை மாஸ்டர் கொலையில் 2 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது
- சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
- விசாரணையில் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உலக்குடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 40). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டத்தை சேர்ந்த ஏம்பல் கிராமத்தில் உள்ள ஒரு டீ கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இச்சம்பவத்தில் தனது கணவர் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ராமச்சந்திரனின் மனைவி ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் டீ கடையில் பணிபுரிந்த சக தொழிலாளர்களான நாரணமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (33), மணல்மேல்குடி நரியனேந்தலை சேர்ந்த ரங்கய்யா (24) ஆகியோர் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து சுப்பிரமணியன், ரங்கையா ஆகியோர் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.