கோவையில் பட்டப்பகலில் வீடு புகுந்து 17 பவுன் நகை கொள்ளை
- ஜான்சன் ஆலயத்துக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
- ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோவை,
கோவை ரத்தினபுரி பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 35). வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆனதால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ஆலயத்திற்கு சென்றார்.
அங்கு பிரார்த்தனை முடிந்து ஜான்சன் மற்றும் குடும்பத்தினர் மாமியார் வீட்டுக்கு சென்றனர். அந்த சமயம் வீட்டு உரிமையாளர் ஜான்சனுக்கு செல்போனில் பேசினார்.
உங்கள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடக்கிறது. எனவே சந்தேகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். உடனே ஜான்சன் வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த 17.4 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்தது.
ஜான்சன் ஆலயத்துக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த கொள்ளையில் உள்ளூர் நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஏற்கனவே கோவையில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.