போதைப்பொருள் விவகாரத்தில் சமரசமின்றி செயலாற்ற வேண்டும் - காவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
- காவல் துறையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பும் கடமையும் அதிகம்.
- குறிப்பாக பெண்கள் புகார் அளிக்க வரும்போது மரியாதையுடன் நடத்தி புகாரை பெற வேண்டும்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார். 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாடு அமைதி பூங்கா என்று இந்திய அளவில் கூறுகின்றனர்.
* போலீஸ் இருக்கிறார்கள் அவர்கள் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என நம்பித்தான் மக்கள் நடமாடுகிறார்கள்.
* அதிகாரத்தை மக்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.
* ஒரு காவலர் செய்யும் நல்ல செயல் அந்த துறைக்கே பெருமையை ஏற்படுத்தி தரும்.
* வீரத்தின் விளை நிலம் என்பது அன்புதான்.
* காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.
* புதிதாக காவல்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.
* காவல் துறையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பும் கடமையும் அதிகம்.
* காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை வெறும் வார்த்தைகளில் இல்லாமல் அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும்.
* குற்றம் செய்பவர்களிடம் இரும்புக்கரத்தையும் புகார் அளிக்க வருபவர்களிடம் அன்புக்கரத்தையும் காட்டுங்கள்.
* பெண்கள், குழந்தைகள் குறித்த புகார்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
* குறிப்பாக பெண்கள் புகார் அளிக்க வரும்போது மரியாதையுடன் நடத்தி புகாரை பெற வேண்டும்.
* பணியில் இருக்கும் பகுதியில் சிறு குற்றம் கூட நடந்துவிடக்கூடாது என ஒவ்வொரு போலீசும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* ஒரு காவலர் தவறு செய்தாலும் அது காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி விடும்.
* போதைப்பொருள் விவகாரத்தில் சமரசமின்றி செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.