செய்திகள்

சபாநாயகருடன் மோதல்: விஜயதரணி வெளியேற்றம்

Published On 2018-06-12 07:35 GMT   |   Update On 2018-06-12 07:35 GMT
தமிழக சட்டசபையில் சபாநாயகர் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். #TNAssembly #congress #Vijayadharani
சென்னை:

சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜயதரணியை கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர்.

அவர்களைப் பார்த்து விஜயதரணி, ‘‘என்னை தொடாதீர்கள்’’ என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆவேசமாக கூறினார். தொடர்ந்து அவர் வெளியேற மறுத்ததால் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

பின்னர் விஜயதரணி நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டேன். நேற்றும் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். தொடர்ந்து நான் வற்புறுத்தியதால் சபை காவலர்களை கொண்டு வெளியேற்றினார்.


சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை அமுக்கியும் வெளியேற்றினார்கள். சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார்.

இவ்வாறு விஜயதரணி கண்ணீர் மல்க கூறினார்.

விஜயதரணி வெளியேற்றப்பட்டதை கண்டித்து மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #congress #Vijayadharani
Tags:    

Similar News