செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-06-06 12:02 IST   |   Update On 2018-06-06 12:02:00 IST
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #TNAssembly #TNMinister #Jayakumar
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. உறுப்பினர் கே.பி.பி. சாமி, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புயலின்போது மூழ்கிய படகுகள் மீட்கப்படாமல் இருக்கின்றன. அந்த பகுதி சேறும் சகதியுமாக உள்ளது.

இதனால் மற்ற மீன்பிடி படகுகளுக்கும், மீனவர்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே மூழ்கிய படகுகளை மீட்கவும், சேறு, சகதிகளை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

தற்போது இந்த மீன்பிடி துறைமுகம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழக அரசு சார்பில் அங்கு எந்த பணியையும் செய்ய முடியாத நிலை உள்ளது.


ஏற்கனவே ஜெயலலிதா இருந்தபோது இந்த மீன்பிடி துறைமுகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நான் டெல்லி சென்றபோது இந்த துறைமுகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறேன். இங்கு ரூ.100 கோடி செலவு செய்து கடல் பகுதியை ஆழப்படுத்தி மீனவர்களுக்கு வசதி செய்து கொடுத்தால் தற்போது ஏற்றுமதியாகும் 4 லட்சம் டன் மீன் 8 லட்சம் டன்னாகும். மீனவர்களும் பல்வேறு வசதிகளை பெற முடியும்.

விரைவில் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புகிறோம். தமிழக அரசும் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #TNMinister #Jayakumar
Tags:    

Similar News