செய்திகள்

ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2018-05-11 09:25 GMT   |   Update On 2018-05-11 09:25 GMT
விருதுநகருக்கு ஆளுநர் சென்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #BlackFlagProtest #TNGovernor #DMKProtest
சென்னை:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தையும் தொடங்கி வைத்து வருகிறார். கவர்னரின் இந்த ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தூய்மை இயக்க திட்டம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விருதுநகர் சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.



இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரைக் கைது செய்வதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் ஆளுநர் ஆய்வுக்காக சென்ற இடங்களில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது எல்லாம் அமைதி காத்த தமிழக காவல்துறை, விருதுநகர் மாவட்டத்திற்கு ஆளுநர் செல்லும் போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது "போலீஸ்ராஜ்யம்"தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டவா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், விருதுநகரில் ஆளுநருக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் தான் தி.மு.க.வினரை காவல்துறை கைது செய்தது என தெரிவித்துள்ளார். #BlackFlagProtest #TNGovernor #DMKProtest

Tags:    

Similar News