பெண்கள் உலகம்
null

"நான் தனித்துவமாக தெரியவேண்டும்" - என்ன செய்ய வேண்டும்?

Published On 2025-11-08 15:00 IST   |   Update On 2025-11-08 15:00:00 IST
  • அழகோ, அதிகாரமோ, பண பலமோ ஒருவரின் தனித்துவத்தைக் காட்டாது.
  • நாம் நடந்துகொள்ளும் விதமும், நம்மை சுற்றி இருப்பவர்களின் நம் மீதான கருத்தும்தான் நம்மை தனித்துவமாக எடுத்துக்காட்டும்.

ஒரு அறையில், ஒரு அலுவலகத்தில், ஒரு கல்லூரியில் இப்படி எங்கு இருந்தாலும் நம்மைச்சுற்றி பலர் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றுதான். ஆனால், "நான் அவர்களிடமிருந்து வேறுபட்டு தனியாக தெரிய வேண்டும்" என பலரும் நினைப்பார்கள். அதுவும் இந்த எண்ணம் பெண்களுக்கு அதிகம் உண்டு.  உங்களுக்கான பதிவுதான் இது. அழகோ, அதிகாரமோ, பண பலமோ ஒருவரை தனித்துவமாக காட்டாது. நாம் ஒருவரிடம் நடந்துகொள்ளும் விதமும், நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதும்தான் நம்மை தனித்துவமாக எடுத்துக்காட்டும். மற்றவர்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டு தெரியவேண்டுமென்றால் உங்களின் சில செயல்பாடுகளை மாற்றினாலே போதும். 

பார்வை...

நாம் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களைப் பார்த்து பேசவேண்டும். பொய் பேசாதவர்கள், நேர்மையானவர்கள் கண்களை பார்த்து பேசுவார்கள் என்ற பேச்சு நீண்டகாலமாக நம்மிடையே உள்ளது. அதனால் ஒருவரின் கண்களை பார்த்து நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகள்மீது நம்பிக்கை வரும். மேலும் நாம் பேசும்போது நம் கண், நம் உதடுகளை தாண்டி உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். அதற்காக அதிகம் கண்களால் தொடர்புகொண்டால் சிலர் தவறாக நினைக்கலாம். சிலருக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும். எந்த விஷயங்களுக்கெல்லாம் கண்களை பார்த்து பேசவேண்டும் அதற்கு மட்டும் கண்களை பயன்படுத்துங்கள்.   

தெளிவான பேச்சு

நாம் சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லவேண்டும். தேவையற்ற பேச்சுகளை குறையுங்கள். தெளிவாக பேசவேண்டும். தேவையானவற்றை மட்டுமே பேசவேண்டும் என கடகடவென ஓடவும் கூடாது. மெதுவாக, உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். நமது பேச்சுத்திறனே ஒருவரை கவரும். 


 நம் வார்த்தைகளைவிட செயல்கள்தான் சத்தமாக பேசும்

உறுதியாக மாறுங்கள்

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவேண்டும் எனக்கூறுவார்கள். ஆம், நாம் ஒருவரிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோமோ அதுபோலத்தான் அவர்கள் நம்மை பிரதிபலிப்பார்கள். நீங்கள் ஒருவரை நடத்தும்விதம், மதிக்கும்விதம்தான் உங்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. உயிர்களிடத்தில் கருணையுடன் நடந்துகொள்ளுங்கள். அதுபோல தேவையான இடத்தில் வேண்டாம் என்பதை சொல்ல பழகுங்கள். ஒரு தெளிவான நிராகரிப்பு என்பது பல இடங்களில் தேவையான ஒன்று. எங்கு வேண்டாமோ அங்கு வேண்டாம் என சொல்வது உங்களுக்கு அமைதி, நன்மையை கொடுப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் மரியாதையையும் பெறச் செய்யும். அதைவிடுத்து என்ன நினைப்பார்களோ என எண்ணி, விருப்பமே இல்லாமல் ஒரு செயலை செய்ய ஒத்துக்கொள்வது உங்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும். சுற்றியுள்ளவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும். 

உடை

நமது உடை பாணியும் பலரை கவரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு பெற நம்பிக்கையுடன் பேசுவதுபோலவே, தனித்துவமாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடை அணிவதும் பலரின் கவனத்தையும் ஈர்க்கும். நேர்த்தியாக உடை உடுத்துவது, சிறந்த தோரணையை வெளிப்படுத்துவது உங்களை இன்னும் தனித்துவமாக காட்டும்.

"சொல்லைவிட செயலே முக்கியம்"

வார்த்தையை காப்பாற்ற வேண்டும். அதாவது கொடுத்த வாக்குறுதியை காக்கவேண்டும். நம் வார்த்தைகளைவிட செயல்கள்தான் சத்தமாக பேசும். நாம் சொன்ன செயலை செய்வது, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்பது மேற்கூறியவற்றை தாண்டி உங்கள்மீது அதிக நம்பிக்கையை பெறச்செய்யும். "ஓ... அவங்களா..., சொன்ன சொல்லை காப்பாத்துவாங்கப்பா" என ஒருவரை சொல்லச்செய்யும். சொன்னநேரத்தில் செய்வது, நேரத்திற்கு இருப்பது போன்ற எதுவாக இருந்தாலும் ஒரு நற்பெயரை பெற்றுக்கொடுக்கும். 

Tags:    

Similar News