null
அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... உண்மையில் யார் காரணம்?
கோவை விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், நவ.2ம் தேதி இரவு, கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டுருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர், காரில் இருந்த இளைஞரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தித்தாளை திறந்தாலே, ஃபோனை ஆன் செய்தாலே, டிவியை போட்டாலே இதே செய்திதான். இச்செய்தியில் பல விவாதங்கள் எழுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது, எப்போதுமே இருவாதம் எழும். அதாவது சட்டம், ஒழுங்கு சரியில்லை; பெண்கள் ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றனர்? ஏன் அவரிடம் பேசினர்? இதில் எது சரி? பார்ப்போம்...
சட்டம், ஒழுங்கு சரியில்லையா?
சட்டம், ஒழுங்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு குற்றம் என்றால் உடனே ஆளும்கட்சியை குறைசொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஒரு அரசுதான் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமா? பொறுப்பா? கொஞ்சம் மக்கள் சிந்தித்து பாருங்கள். ஒரு அரசு மட்டும் என்ன செய்யமுடியும்?
பல இடங்களில், அதுவும் பொது இடங்களில் ஒரு கும்பல் சண்டை போடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த சண்டையை சுற்றி இருக்கும் பொதுமக்கள் தடுக்கலாம். ஆனால் உயிர்மீதான பயத்தால் யாரும் தடுக்கமாட்டோம். அப்படி அனைவரும் ஒன்றுக்கூடி தடுத்தால், ஒவ்வொரு இடங்களில் இது நிகழும்போதும் மக்கள்மீது குற்றம் புரிபவர்களுக்கு ஒரு பயம் வரும். ஆனால் நமக்கு என்ன என மக்கள் ஒதுங்கி இருப்போம். என்று, மக்கள்மீது குற்றம் புரிபவர்களுக்கு பயம் வருகிறதோ, அப்போதுதான் குற்றங்கள் குறையும். மற்றொன்று காவல்துறையினர். உண்மையில் காவல்துறையினர் மீது பல விமர்சனங்கள் இருப்பது நிதர்சனமான உண்மை. அதேநேரம் காவல்துறையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் என தனித்தனியாக ஒரு காவலரை நியமிக்க முடியாது என்பதும் நியாயமான ஒன்றுதானே.
சுய ஒழுக்கம்
மறுபக்கம் எளிதாக ஒருவரை குத்திவிட்டு, கொடூரமாக கொலைசெய்து விட்டு, ஒரு பெண்ணின் அழுகை, கதறல் சத்தம்கேட்டும் ஒருவன் குற்றத்தை புரிகிறான். நமக்கு ஒரு எறும்பை மிதித்துவிட்டால் கூட உள்ளம் பதறுகிறது. இங்கு அவனுக்கு மனிதாபிமானம் இல்லையா? இரக்க குணம் இல்லையா? எது இல்லை? சிறுவயதிலிருந்தே ஒருவருக்கு அனைத்து நல் ஒழுக்கங்களையும், மனிதாபிமானம், இரக்கக்குணம் போன்றவற்றையும் பெற்றோர்கள் சொல்லி வளர்க்கவேண்டும். ஒருவரின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு நல்ல வளர்ப்பு, குற்றங்களை தடுக்க உதவும். ஆனால் பல பெற்றோர்களே குழந்தைகள் குற்றவாளிகளாக உருவெடுக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றனர். வளர்த்தலை தாண்டி சுய ஒழுக்கமும் தேவை. ஒரு மனிதன் சுய ஒழுக்கத்துடன் வளருதல் என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் ஒழுக்கத்துடன் இல்லாமல், சட்டத்தை மட்டும் குறை கூறுவது எப்படி?
சட்டங்கள்
குற்றங்கள் நடக்க முக்கிய காரணம் சட்டங்கள் கடுமையாக இல்லை என்ற பேச்சு நீண்டகாலமாக தொடர்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில்தான் கொலை செய்தவன், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தவன் போன்றோரெல்லாம் ஜாமினில் ஜாலியாக சுற்றுகிறார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இல்லாததால்தான், பல குற்றச் செயல்களுக்கு சிறார்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். எப்போது ஒரு சட்டத்தின் மீது பயம் வருகிறதோ அப்போதுதான் குற்றம் குறையும். இருப்பினும் வெறும் சட்டத்தால் மட்டும் குற்றங்களை குறைக்க முடியாது.
எல்லாவற்றிற்கும் அரசுதான் பொறுப்பா?
மேலே நாம் குறிப்பிட்ட கோவை கல்லூரி பெண் வழக்கு உட்பட தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் அரசுதான் பொறுப்பா? கொஞ்சம் தெளியுங்கள். சொந்த குடும்பத்தை, உறவினர்களை, தான் நேசித்த காதலரை, காதலியை சிலர் கொல்கிறார்கள். இதற்கும் அரசை குறை கூறவேண்டியது. சொந்த குடும்பத்தில் அண்ணன், தனது தம்பியை வெட்டப்போகிறான் என்பது அரசுக்கு எப்படி தெரியும்? தெரிந்தால்தானே ஒரு காவலரை அங்கு முன்கூட்டியே காவல் வைக்கமுடியும். தகாத உறவுகளால் பல கொலைகள் அதுவும் அப்பாவிகள் பலர் கொலை செய்யப்படுகின்றனர்.
இதற்கும் அரசுதான் காரணம் என்றால், ஒவ்வொருவரும் தங்கள் உறவு குறித்து அரசிடம் பதிவு செய்தால், அதற்கேற்றார் போல ஒரு காவலரை நியமிக்கலாம். இருப்பினும் சில வழக்குகளில் கொலைசெய்துவிட்டு தண்டனை குறித்து தெரிந்தும், காவல் நிலையங்களில் சரணடைகின்றனர். இதற்கு காரணம்? சட்டத்தின் மீது பயம் இல்லாததா? இல்லை. சில இடங்களில் உணர்ச்சிரீதியாக சிலர் பொறுமை இழக்கையில் தனது நெருங்கிய உறவுகளை கூட கொல்ல துணிகின்றனர். கொலை என்பது எல்லாவற்றிற்கும் தீர்வு அல்ல என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மூன்றாவது கூட்ட நெரிசல். ஆன்மிக நிகழ்ச்சிகள், பெங்களூரு ஆர்பிசி கூட்ட நெரிசல், சமீபத்தில் தவெக கூட்ட நெரிசல் என இவற்றில் சிக்கி ஏராளமானோர் இறந்த செய்தியை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கு அரசும், காவல்துறையும் பாதுகாப்பு வழங்காததுதான் காரணம் என குற்றம் சொல்பவர்கள் சொல்லலாம். ஆனால் 10 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 50 பேர் இருந்தால் காவல்துறையும், அரசும் மட்டும் என்ன செய்யும்? இதை ஏன் மக்கள் சிந்திக்கவே மறுக்கிறீர்கள்? உங்களின் சுய ஒழுக்கம், ஒரு பொது அறிவு, பொது புரிதல் எங்கே செல்கிறது? ஒருவர் இருக்கவேண்டிய இடத்தில் பத்துபேர் இருந்தால் மூச்சுவிடுதல் சிரமமாகும். தாகம் எடுக்கும். அங்கு மூச்சும் விட இயலாது. முன்னேற்பாடுகள் இல்லாததால் தண்ணீரும் குடிக்க இயலாது. நிற்பதற்கு இடமும் இல்லாமல், ஒருவரை ஒருவர் நெரித்து மேலே ஏறி மிதிப்பர். ஏனெனில் அவரவர் உயிர்தானே அவரவருக்கு முக்கியம். அதனால் மற்றவர்களை நினைக்கமாட்டார்கள். இப்படி ஒரு உயிர் அங்கு போக அங்கு இருப்பவர்களே காரணமாக இருந்துகொண்டு ஒரு அரசை குற்றம் சாட்டினால் எப்படித்தகும்?
சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடு அவசியம்
கண்டிப்பாக அரசும் பொறுப்பேற்க வேண்டும். நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு கண்டிப்பாக ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால் மக்கள் சுய ஒழுக்கத்துடன், ஒரு பொது புரிதலுடன் இருக்கவேண்டும். அரசை கூறுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பாதுகாப்பு முக்கியம்!
கோவை மாணவி வழக்கு உட்பட காதலர்கள் பலரும் இதுபோல தனிமையில் இருக்கும்போது, பலர் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். காதலர்கள் தனிமையில் நேரம் செலவிடவேண்டும் என விரும்புவோம். அது நம் அனைவருக்குள்ளும் எழும் ஒரு இயல்பான உணர்வு. ஆனால் நாம் நேரம் செலவிடுவதற்கு தகுந்த இடம் எது? பலரும் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்று இதுபோல சிக்கிக் கொள்கின்றனர். பெண்ணை ஒரு ஆண் உண்மையில் நேசிக்கிறான் என்றால், அவன் அந்த பெண்ணின் பாதுகாப்பிற்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பான். உணர்ச்சிகள் மட்டும் காதல் இல்லை. உண்மையான நேசம்தான் காதல் என்பதை மனதில் நிறுத்திக்கொள்வோம்.
எது பெண் சுதந்திரம்?
1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் நாம் நினைத்த நேரத்தில், நமக்கு பிடித்ததை, நமக்கு பிடித்த இடத்திற்கு, நமக்கு பிடித்தவருடன் செல்ல முடியவில்லை என்பது என்ன சுதந்திரம் என கேள்வி எழுப்பலாம். அதற்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் இங்கு நமக்கு பாதுகாப்பு சுதந்திரம் இல்லை என்பதை பெண்கள் உணருங்கள். நினைத்த நேரத்திற்கு வெளியே செல்லலாம் என்பது சுதந்திரம்தான். ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு தேவை. எதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் அது நிலையோடு இருக்கும். இதை சொல்வது அபத்தமானது என்று தெரிந்தாலும், நம் நாட்டின் நிலை என்ன? நமக்கு இங்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பதை பெண்கள் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காதலரை சந்திப்பது தவறு இல்லை. ஆனால் அந்த சந்திப்பை ஒரு பாதுகாப்பான இடத்தில் நிகழ்த்துங்கள். இந்தியாவில் அம்மாக்களே தங்கள் பெண்பிள்ளைகளைத்தான், ஒழுங்காக உடை அணிய சொல்வார்கள். எப்போதும் தங்கள் ஆண்பிள்ளைகளிடம் சாதரணமாகக்கூட பெண்களை தவறாக பார்க்கக்கூடாது என சொல்லமாட்டார்கள். அப்படி இருக்கையில் இங்கு நாம்தான் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதனால் கிடைக்கும் சுதந்திரத்தை முதலில் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறோமா என எண்ணுங்கள். இந்தக் கருத்துகள் பெண் சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் இங்கு சட்டம், ஒழுங்கு, ஒரு ஆணின் பார்வை, மக்களின் பார்வை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் பெண்கள் நினைக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்பதை தெளிவுப்படுத்திக்கொள்வோம்.