பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த 8 பொருட்கள் போதும்!
- பளபளப்பான, தெளிவான முகம் உடல்நலனை பிரதிபலிக்கிறது
- அனைத்து தோல் நோய்களுக்கும் மஞ்சள் தீர்வாக உள்ளது.
நமது சருமம், நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தாண்டி, நமது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். பளபளப்பான மற்றும் தெளிவான முகம் உங்கள் உடல்நலனை பிரதிபலிக்கிறது. மன அழுத்தம், மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கின்றன. நமது சருமம் பெரும்பாலும் இதன் விளைவுகளை பிரதிபலிக்கிறது. பளபளப்பான சருமத்தைப் பராமரிப்பது என்பது தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல. ஆரோக்கியத்தை பற்றியதும். சரும ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் இடையிலான ஆழமான தொடர்பைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும். என்னதான் நாம் சந்தையில் கிடைக்கும் சரும பராமரிப்பு பொருட்களை அழகுக்காக வாங்கி பயன்படுத்தினாலும், இயற்கை பொருட்கள் தரும் அழகை அதனால் ஈடுகொடுக்க முடியாது. அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த முக்கிய மூலப்பொருட்கள் குறித்து பார்ப்போம்.
மஞ்சள்
மஞ்சள் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் நிறத்திற்கு காரணமான இதில் இருக்கும் குர்குமின் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுவதுடன், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. மஞ்சள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தை மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், முகத்திற்கு பளபளப்பை வழங்கவும், கண்ணின் கருவளையத்தை போக்கவும், வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கவும் மஞ்சள் முக்கிய பங்காற்றுகிறது.
தேன்
தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராகும். தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களைத் தடுக்கவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகின்றன. முகத்தில் உள்ள வடுக்களை மறைக்க தேன் உதவுகிறது. சருமத்தை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆரஞ்ச் ஜுஸ்
ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் சருமத்தை சுத்தம் செய்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
இயற்கை பொருட்கள் தரும் அழகை எதனாலும் ஈடுகொடுக்க முடியாது.
எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது. இது நமது சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்து நமது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
தயிர்
லாக்டிக் அமிலம் நிறைந்த தயிர், சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. அதே நேரத்தில் பழுப்பு மற்றும் கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. இது வெயிலில் ஏற்படும் தீக்காயங்களைத் தணித்து, ஆரோக்கியமான, பொலிவான சருமத்திற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. பாதாம் எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வது நமது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது.
வாழைப்பழம்
வாழைப்பழம் நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் பி நிறைந்துள்ளன. இவை நமது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன.
பப்பாளி
பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை முகத்திற்கு பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள கறைகள் மற்றும் வடுக்கள் குறையும். பப்பாளி ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராகவும் செயல்படுகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது. சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், அழகான பளபளப்புடன் வைத்திருக்க பப்பாளி உதவுகிறது.