பொது மருத்துவம்

ஆரம்பநிலையில் உள்ள சிறுநீரக கல்... தடுக்கும் சித்த மருந்துகள், உணவுப் பழக்க வழக்கங்கள்

Published On 2023-02-01 06:44 GMT   |   Update On 2023-02-01 06:44 GMT
  • சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்புமுறைகளும் உள்ளன.
  • கால்சியம், வைட்டமின் ‘டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

சிறுநீரகக் கற்களுக்கு சித்த மருத்துவம்: சிறுகன்பீளை, நெருஞ்சில் விதை, மூக்கிரட்டை இவைகளை பொடித்து வைத்துக்கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து, காலை, மாலை என இருவேளை குடிக்கவும். மாவிலங்கப்பட்டை, தொட்டால் சிணுங்கி, வெட்டிவேர் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.

கல்லுருக்கி இலை (Scoparia dulcis) மற்றும் இரணகள்ளி இலை (Kalanchoe pinnata) போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர ேநாய் குணமாகும். சித்த மருந்துகளில், வெடியுப்புச் சுண்ணம் 50 மி.கி., நண்டுக்கல் பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை நீர்முள்ளிக் குடிநீரில் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். அமிர்தாதி சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, மாலை இருவேளை சாப்பிட வேண்டும்.

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்புமுறைகள்: விட்டமின் 'ஏ' குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதாலும், சிறுநீரக கற்களை கரைப்பதாலும், பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாகுவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம், வைட்டமின் 'டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். கால்சியம் அளவில் குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.

இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ரூட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை சிறுநீரகக் கல் உள்ளவர்கள் உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளதால், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும். வெண்பூசணி, கோவைக்காய், முள்ளங்கிக்காய், சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்கவேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை திரிபலா எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,

மின்னஞ்சல்: doctor@dt.co.in,

வாட்ஸ் அப்: 7824044499

Tags:    

Similar News