குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய சாலை பாதுகாப்பு விதிகள்

Published On 2023-05-19 08:18 GMT   |   Update On 2023-05-19 08:18 GMT
  • சாலையைக் கடக்கும்போதும், சைக்கிள் ஓட்டும்போதும் பல குழந்தைகள் காயமடைகின்றனர்.
  • சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது அவசியமானது. இதன் மூலம் அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க முடியும். குழந்தைகள் வெளிப்புறங்களில் இருக்கும்போதும், விளையாடும்போதும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதில் பலரும் போதுமான கவனம் செலுத்துவதில்லை. இதனால் சாலையைக் கடக்கும்போதும், சைக்கிள் ஓட்டும்போதும் பல குழந்தைகள் காயமடைகின்றனர். இதைத் தவிர்க்க, சிறு வயதிலேயே அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விபத்துகள், காயங்கள், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் போன்றவற்றை பற்றி அதிக அளவில் எடுத்துக்கூறி அவர்களை பயமுறுத்தக்கூடாது. போக்குவரத்து விதிகளை பயமின்றி அறிந்துகொள்ளும் வகையில், அவர்களுக்கு வேடிக்கையாக கற்பிக்க வேண்டும்.

சிக்னல்களின் அவசியம்: அடிப்படை போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சிக்னல்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்லது. நடந்து செல்லும்போது சாலையை கடப்பதற்கு பாதசாரிகளுக்கான பாதையை (ஜீப்ரா கிராசிங்கை) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பச்சை விளக்கு எரியும்போது செல்வது, சிவப்பு விளக்கு எரியும்போது நிற்பது, மஞ்சள் விளக்கு எரியும்போது வேகத்தை குறைப்பது ஆகியவை முக்கியமான விதிகள் என்று அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்பு: குழந்தைகள் சைக்கிள் ஓட்டும்போதும் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும். பிரேக், டயரில் போதுமான காற்று, சைக்கிள் செயின் என அனைத்தும் சரியான நிலையில் இருக்கின்றதா என்று சோதித்த பின்பே சைக்கிளைப் பயன்படுத்த அறிவுறுத்தவும். இரவில் சைக்கிளைப் பயன்படுத்தினால், அதில் பொருத்தப்பட்டிருக்கும் முகப்பு விளக்கு சரியாக இயங்குகின்றதா? என்று பார்க்கவும். சாலையில் செல்லும்போது, சைக்கிளுக்கான பாதையைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய பாதை இல்லாத பகுதியில், சாலையின் ஓரமாக செல்ல அறிவுறுத்த வேண்டும். பரபரப்பான தெருக்களில் பெற்றோர் தங்கள் மேற்பார்வையின்றி குழந்தைகளை சைக்கிள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது.

அவசரம் வேண்டாம்: சாலையை கடக்கும்போது இடப்புறமும், வலப்புறமும் பார்த்து கவனமுடன் செல்ல வேண்டும். ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்தால் அவற்றுக்கு வழிவிட வேண்டும். வாகனம் அருகில் உள்ளதா? தொலைவில் உள்ளதா? என்பதை உரத்த ஒலி அல்லது மெல்லிய ஒலியைக் கொண்டு எப்படி வேறுபடுத்திக் கண்டறிவது என்பது குறித்தும் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். சாலையைக் கடக்கும்போது, நிதானமாக நடந்து கடப்பது முக்கியம், அவசரமாக ஓடி கடக்கக்கூடாது எனவும் கற்றுத்தருவது அவசியம். சாலை விதிகளை செயல்முறை விளக்கமாகப் பெற்றோர் பயிற்சி அளித்தால் குழந்தைகளுக்கு எளிதில் புரிய வைக்க முடியும்.

Tags:    

Similar News