குழந்தை பராமரிப்பு

குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்...

Published On 2022-09-15 04:41 GMT   |   Update On 2022-09-15 04:41 GMT
  • குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
  • குழந்தைகளின் கண்களை பார்த்தவாறே அவர்களின் பேச்சை ரசித்து கேளுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது.

அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின் படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள்.

பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள். பெற்றோரின் பார்வையில் அவர்கள் பேசும் விஷயங்கள் சாதாரணமாக தெரியலாம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வை முன் வைத்தால் மட்டுமே தொடர்ந்து பெற்றோரிடம் ஆர்வமாக பேசுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் நாளடைவில் பெற்றோரிடம் பேசும் நேரம் குறைந்து போய்விடும்.

குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள். கண் தொடர்பு அவசியமானது. அவர்களின் கண்களை பார்த்தவாறே அவர்களின் பேச்சை ரசித்து கேளுங்கள். குழந்தைகள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், பேச்சுக்கு இடையே குறிப்பிடுவார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News