குழந்தை பராமரிப்பு

உடன் பிறந்தவர்களுக்கு இடையில் தாழ்வு மனப்பான்மையை நீக்குதல்

Published On 2022-08-05 07:43 GMT   |   Update On 2022-08-05 07:43 GMT
  • உடன்பிறந்தவர்களைப்போல நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதை நிறுத்துங்கள்.
  • உடன்பிறந்தவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள்.

ஒவ்வொரு சூழலிலும் தன்னை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கும் மனோபாவம் நமக்குள் வளர்வதை 'தாழ்வு மனப்பான்மை' என்கிறோம். ஒரு குழந்தை வளரும்போது, தன்னை சுற்றியுள்ளவர்களைப் போல தானும் ஆக வேண்டும் என்று விரும்பும். அந்த இடத்தில் இருந்தே தாழ்வு மனப்பான்மை ஆரம்பிக்கிறது. அது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

உடன் பிறந்தவர்களுக்கு இடையில், ஒருவரை விட மற்றொருவர் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருக்கும்போதும், அதை ஒப்பிட்டு, ஒருவர் மற்றவரை விமர்சிக்கும்போதும் அல்லது தங்கள் மீது அதிகாரத்தை நிலைநாட்டும்போதும் 'தாழ்வு மனப்பான்மை' ஏற்படும். இது அதிகமாகும்போது, 'வெற்றி அடைவோம்' என்ற எண்ணம் குறைந்து கொண்டே சென்று, மனதளவில் விரக்தி அடையச்செய்யும். இதன் மூலம், தொடர்ந்து தோல்வியும், முயற்சி செய்ய விரும்பாத மன நிலையும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மீதான பாசம் குறையும். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு கொண்டிருப்பதிலேயே வாழ்க்கை ஓடும். இதில் இருந்து மீள்வதற்கு கீழ் உள்ளவற்றை செய்யலாம்.

உடன்பிறந்தவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள். ஒரே தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் அழகு, நிறம், படிப்பு, உடல் தோற்றம் போன்றவற்றில் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைகளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பது, உங்கள் நிறைகளை பார்க்க முடியாமல் செய்துவிடும்.

உடன்பிறந்தவர்களைப்போல நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதை நிறுத்துங்கள். மற்றவரைப் போல இருக்க வேண்டும் என்று நினைப்பது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். நீங்கள் நீங்களாகவே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய இயல்பான தன்மையை நேசியுங்கள். எந்த விஷயத்திற்காக நீங்கள், உடன்பிறந்தவர்களுடன் தாழ்வு மனப்பான்மை கொள்கிறீர்கள் என்று நிதானமாக யோசித்து எழுதுங்கள்.

அவர்களை விட, நீங்கள் எவற்றில் எல்லாம் உயர்வாக இருக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். ஒவ்வொருவரும் நேர்மறை பண்புகள் மற்றும் குறைபாடுகளின் வெவ்வேறு கலவையாகும். இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது, உங்களை யதார்த்தமாக யோசிக்க வைக்கும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

கடந்த கால தவறுகளைப் பற்றி சிந்திப்பதற்கோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதற்கோ இடம்கொடு்க்காமல், தற்போதைய தருணத்திற்கு உங்களை மீண்டும் கொண்டு வர தியானம் உதவும். இதனால் உங்கள் தாழ்வு மனப்பான்மை குறையும். உங்களுடைய தனித்திறமை எதுவெனக் கண்டுபிடியுங்கள். அவற்றை வளர்த்து வாழ்வில் முன்னேறும்போது, உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

Tags:    

Similar News