குழந்தை பராமரிப்பு

குழந்தைகளை பாராட்ட பழகுங்கள்

Published On 2024-03-29 06:35 GMT   |   Update On 2024-03-29 06:35 GMT
  • பாராட்டு என்பது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது.
  • குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்க்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள்.

உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்த குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும் போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளை பாராட்டும்போது, எந்த செயலுக்காக பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.

பாராட்டுகளை பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சரியப் பார்வையோ, தலைகோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச்செல்வதோ, பிடித்த உணவை சமைத்து தருவதாகவோ கூட இருக்கலாம்.

உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் பாராட்டுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.

 நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப் பாராட்டும் தன்மையை குழந்தைகளிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பழக்குங்கள். இது அவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.

திறனை வெளிப்படுத்தும்போதும், போட்டிகளில் வெற்றி பெறும்போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும். ஒருமுறை பாராட்டிவிட்டு அந்த திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.

பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியாகவும், சமூக ரீதியாகவும் தேவையானது. அதை தவறாமல் வழங்குங்கள்.

Tags:    

Similar News