குழந்தை பராமரிப்பு
கோபத்தைக் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்

கோபத்தைக் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்

Update: 2022-05-19 08:07 GMT
குழந்தைப் பருவம் முதலே கோபத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் சில எளிய பயிற்சிகளை அறிவுறுத்துகின்றனர்.
இளமைப் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்தான், பெரும்பாலும் மனநிலை மாற்றங்களுக்கு காரணமாகும். இதனால் இளவயது பிள்ளைகளுக்கு கோபம், அழுகை, ஆத்திரம், அடம்பிடித்தல் போன்ற உணர்வுகள் மேலோங்கி இருக்கின்றன. பெற்றோர் இதை கவனமுடன் கையாள்வதற்கான வழிகள் இதோ…

வற்புறுத்தல் கூடாது:

கோபத்தில், இளம் வயதினரின் மனநிலை சிறு குழந்தையைப் போல் இருக்கும். அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது, நம் பேச்சில் கவனம் இருக்காது. மாறாக, பிடிவாத குணமும், முரட்டுத்தனமும் அதிகரிக்கும். எனவே, இந்த நிலையில் பிள்ளைகள் தங்கள் கருத்துகளை அச்சமின்றி முழுமையாக வெளிப்படுத்தத் தேவையான வாய்ப்பை வழங்க வேண்டும். இது அவர்களின் மனநிலையை முழுமையாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுவதற்கு வாய்ப்பாக அமையும்.

விமர்சனங்களைத் தவிருங்கள்:

பிள்ளைகள் கோபத்தில் இருக்கும்போது, அவர்களிடம் எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறந்தது. தவறுகளைச் சுட்டிக் காட்டும் போதும், ஆரோக்கியமான விமர்சனங்களையே வெளிப்படுத்த வேண்டும். எதிர்மறையான விமர்சனங்கள் அவர்களின் மனதில் தேவையற்ற சிந்தனையைத் தூண்டும். இது மேலும், அவர்களை வலுவிழக்கச் செய்துவிடும். எனவே, அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விஷயங்களைப் புரிய வைக்க முயற்சிக்கலாம். கோபத்தால், எங்கு, என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மென்மையாகப் பிள்ளைகள் உணரும்படிக் கூற வேண்டும்.

நிலைமையை உணர்ந்து செயல்படுதல்:

கோபத்தின் வெளிப்பாடு வாய்மொழியாகவும் அல்லது சண்டையிடும் வகையிலும் இருக்கலாம். இதில், பிள்ளைகள் எந்த நிலையில் இருந்தாலும், நாமும் அதே மனநிலையுடன் அவர்களை அணுகக்கூடாது. அவர்கள் அமைதி அடைவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும். அதற்கேற்ப மென்மையாக அறிவுரைகளை மட்டும் வழங்கி, அங்கிருந்து பெற்றோர் விலகிச் செல்வது சிறந்தது.

நேரத்தைச் செலவிடுங்கள்:

இளம் வயதினருக்கு ஏற்படும் கோபம் பெரும்பாலும் தனிமை, விரக்தி போன்ற காரணங்களால் ஏற்படும் மன அழுத்தத்தின் வெளிப்பாடாகும். எனவே, இதைச் சரி செய்வதற்கு, முடிந்தவரை பிள்ளைகளுடன், குடும்பமாக நேரத்தைச் செலவிட வேண்டும். இதுதான், அவர்களுடன் குடும்பத்தைப் பிணைக்கச் சரியான வழி.

பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்து, அவற்றுடன் தொடர்புடைய செயல்களைச் செய்ய முயற்சிப்பது, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவது, திரைப்படம் பார்ப்பது, விளையாட்டில் மனதை திருப்புவது என மனநிலையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

சமாளிக்கும் திறன்:

கோபத்தில் அனைவரிடமும் முரட்டுத்தனமான எண்ணங்கள் வெளிப்படும். எனவே, குழந்தைப் பருவம் முதலே கோபத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் சில எளிய பயிற்சிகளை அறிவுறுத்துகின்றனர்.

அதன் அடிப்படையில் மனதிற்கு இதமான இசை கேட்பது, ஆழமாக சுவாசிப்பது, தியானம் செய்வது, ஓவியம் வரைவது, எளிய உடற்பயிற்சிகளை செய்வது, எண்களைத் தலைகீழாக எண்ண வைப்பது என சில பயிற்சிகளை அளிக்கலாம்.
Tags:    

Similar News