குழந்தை பராமரிப்பு
குழந்தை திருமணம்

குழந்தை திருமணத்தைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள்

Published On 2022-05-16 04:29 GMT   |   Update On 2022-05-16 04:29 GMT
குழந்தை திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, “குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ல் இயற்றப்பட்டது இச்சட்டத்தின்படி. 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்; இத்திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தில் பல்வேறு இடைவெளிகள் உள்ளன. இந்தச் சட்டம் மூன்று வகையான திருமணங்களைக் குறிக்கிறது (voidable, void and void ab initio).

இச்சட்டத்தின் பிரிவு 3-ன்படி, இந்த சட்டம் இயற்றப்படும் முன்போ அல்லது பின்போ, 18 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு திருமணம் ஆகியிருந்தால், திருமணத்தின் போது குழந்தையாக இருப்பவர் விருப்பத்தின் பேரில் அவர் சேர்ந்து வாழ விரும்பினால் தவிர்க்க முடியாது (Voidable). இல்லையென்றால் பதினெட்டு வயது நிறைவடைந்து 2 ஆண்டுகளுக்குள் அக்குழந்தை மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்து திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கச் செய்யலாம்.

பிரிவு 12-ன்படி, குழந்தைத் திருமணத்திற்காக சட்டபூர்வமான பாதுகாவலரிடம் இருந்து கவர்ந்து செல்லப்பட்டால் அல்லது வஞ்சகமாக ஏமாற்றி, கட்டாயப்படுத்தித் திருமணம் செய்தால் அல்லது திருமணத்திற்காக விற்கப்பட்டால் அல்லது திருமணம் என்ற பெயரில் கடத்தப்படுதல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டால் அந்தத் திருமணம் செல்லாது. (Void). பிரிவு 14- ன்படி, குழந்தைத் திருமணத்திற்கு நீதிமன்றத்தில் பிரிவு 13- ன்படி இடைக்கால அல்லது இறுதித் தடை பெறப்பட்டு, அந்தத் தடைக்கு மாறாக குழந்தைத் திருமணம் நடைபெற்றால் அத்திருமணம் செல்லாது. (Void ab initio).

இச்சட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு 326 வழக்குகளும் (தமிழ்நாடு - 55 , கர்நாடகா - 51, மேற்கு வங்கம் - 41 , அசாம் - 23, ஆந்திரா மற்றும் தெலங்கானா தலா - 19 உட்பட), 2017 ஆம் ஆண்டு 395 வழக்குகளும் ( கர்நாடகா - 65, அசாம் - 58 தமிழ்நாடு - 55 தெலங்கானா - 25 மேற்கு வங்கம் - 49 உட்பட), 2018 ஆம் ஆண்டு 501 ( அசாம் - 88, கர்நாடகா - 73 மேற்கு வங்கம் - 70 தமிழ்நாடு - 67 பிஹார் - 35 உட்பட) வழக்குகளும் பதிவாகியுள்ளன. (ஆதாரம்: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்).

நடைபெறும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையை பதிவான வழக்குகளுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது. பெரும்பாலான வழக்குகள் பதியப்படாமல் இருக்கின்றன. ஆகவே, இந்தச் சட்டம் முழுமையாக குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யவில்லை.

மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தில் (Protection of Children from Sexual Offences Act – POCSO Act 2012), 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன், அவர்கள் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அது குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைக் கொடுத்தது. இத்தீர்ப்பின்படி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375- ன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன், மனைவியாக இருந்தாலும் பாலுறவு கொள்வது குற்றமென்று கூறியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ல் கொடுக்கப்பட்ட விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களுக்கு ஏற்ப குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை.
Tags:    

Similar News