குழந்தை பராமரிப்பு
குழந்தை திருமணம்

குழந்தை திருமணம்... காரணங்கள்...

Published On 2022-05-14 08:28 GMT   |   Update On 2022-05-14 08:28 GMT
பெற்றோர், அவர்கள் நினைக்கும் வரனுக்குத் திருமணம் செய்ய, குழந்தைத் திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.
உலகெங்கிலும் குழந்தைத் திருமணம் என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக இன்றளவும் இருந்து வருகிறது. இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறது. இதைக் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகக் கருத வேண்டியிருக்கிறது. இருபாலினத்தவரும் - ஆண் மற்றும் பெண் குழந்தைகள், குழந்தைத் திருமணத்தால் பாதிப்படைகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடிக் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.10 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு குழந்தைகளில் ஒருவருக்கு 18 வயதிற்கு முன் திருமணம் நடைபெற்று வந்தது. தற்போது குறைந்து ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடைபெறுகிறது.

உலக அளவில், எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (NFHS -4), குழந்தைத் திருமணத்திற்கான முக்கியக் காரணிகளை ஆராய்ந்து பார்த்தால், கல்விக்கும், குழந்தைத் திருமணத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைப் புள்ளிவிவரம் காட்டுகிறது.

பெரும்பாலும் ஏழை மற்றும் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம் அதிகமாக உள்ளது. 15 - 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஏழைக் குடும்பப் பின்னணியிலுள்ள குழந்தைகளுக்கு 16.6 சதவீதம்; நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு 12.7 சதவீதம்; பணக்காரக் குடும்பங்களிலுள்ள குழந்தைகளுக்கு 5.4 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.  பொதுவாக பெண் குழந்தைகள் சுமையாக / பாரமாகக் கருதப்படுகிறார்கள்; பாரம்பரியமாக, பெண் குழந்தைகளை விரைவாகத் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் உள்ளது; குறைவான வயதில் திருமணம் செய்தால் குறைவான வரதட்சணை கொடுத்தால் போதும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது.

பெண் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்து இருப்பதால் அவர்களுக்கு வேறு வழியில்லை; பேச்சை மீற மாட்டார்கள்; குழந்தைத் திருமணத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு சமூக, பொருளாதார ரீதியாக மற்றும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற பெற்றோர் நம்புவது; தாயோ அல்லது தந்தையோ இல்லாத பெண் குழந்தைகளைப் பாரமரிப்பதிலுள்ள சிரமங்கள்; குழந்தைத் திருமணத்தின் பின்விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வின்மை; ஜோதிடம், ஜாதகம் போன்றவற்றிலுள்ள நம்பிக்கை; சொந்தம் / சொத்து விட்டுப் போகக் கூடாது என்ற எண்ணம் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.
Tags:    

Similar News