குழந்தை பராமரிப்பு
உங்கள் குழந்தைகளையும் ‘ஸ்மார்ட் கிட்’டாக மாற்றலாம்

உங்கள் குழந்தைகளையும் ‘ஸ்மார்ட் கிட்’டாக மாற்றலாம்

Update: 2022-04-28 07:15 GMT
சமீபத்திய ஆய்வில், படிக்கும் பழக்கத்தால், குழந்தைகளின் மொழித்திறன் அதிகரிப்பது மட்டுமின்றி, வெளியுலகம் சார்ந்த அறிவும் வளரும் என கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குள் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியாகக் கண்டறிந்து சிந்தனையைத் தூண்டிவிடும்போது, அந்தத் திறமை மிளிர்ந்து ‘ஸ்மார்ட்’ குழந்தைகளாக ஜொலிப்பார்கள். அதற்கான வழிகள் இங்கே…

எதிர்பார்ப்பை தவிர்த்தல்:

ஒரு செயலைச் செய்யும்போது, எப்படி செய்தால் முடிவு சிறப்பாக அமையும் என யோசிக்கக் கற்றுத் தர வேண்டும். இதனால் சவாலான விஷயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சிந்திக்கும் திறன் தூண்டப்படும். சிறு வயதில் இதுபோன்று செயல்பட வைப்பதால், எதிர்காலத்தில் குழந்தைகளால் எந்த விஷயத்தையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பது அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முயற்சி செய்யும்போது, எந்த வகையான முடிவு வந்தாலும் அதைப் பற்றி விமர்சிக்காமல் ஏற்றுக் கொள்ள பழக்க வேண்டும்.

படிக்க அனுமதியுங்கள்:

குழந்தைகளுக்கு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருவதைவிட, அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபட வையுங்கள். இதில், முக்கியமான ஒன்று குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை அதிகரிப்பது. சமீபத்திய ஆய்வில், படிக்கும் பழக்கத்தால், குழந்தைகளின் மொழித்திறன் அதிகரிப்பது மட்டுமின்றி, வெளியுலகம் சார்ந்த அறிவும் வளரும் என கண்டறியப்பட்டுள்ளது.

பாடப்புத்தகம் மட்டுமின்றி, பிற அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்க வைப்பது சிந்தனையை தூண்டிவிட சிறந்த வழி.

ஆரோக்கியமான சூழல்:

சுற்றிலும் பலவித பிரச்சினைகள் உள்ள சூழலில் வளரும் குழந்தைகளுக்கு, மன அழுத்தம் ஏற்படும்.  இதைத் தவிர்த்து அவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தித் தருவது முக்கியம். இதற்கு பெற்றோர், பிள்ளைகளுடன் இணக்கமாக இருக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

மூளைக்கு பயிற்சி அளியுங்கள்:

இன்றைய சூழலில், இறுக்கமான மனநிலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் உள்ளது. இதைத் தவிர்க்க அவ்வப்போது உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் தேவைப்படுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை, அதிக சிரமம் கொடுக்காத வகையிலான பயிற்சிகள், உடல் வலிமைக்கும், மூளையின் செயல்பாட்டுக்கும் அவசியமாகிறது. மூளைக்குப் பயிற்சி அளிக்கும்போது, சமூகம் சார்ந்த திறமை வளர்ந்து, சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். கற்பனைத் திறனும், யோசிக்கும் திறனும் குழந்தைகளிடம் இயற்கையாகவே வளரும்.

நேர்நிலையான குழுவை உருவாக்குங்கள்:

குழந்தைகளிடம் நாம் எந்த வகையான சிந்தனையை உருவாக்குகிறோமோ, அதன்படித்தான் எதிர்காலம் அமையும். ஆரம்பம் முதலே நல்ல சிந்தனையை உருவாக்கத் தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். நல்லவற்றைச் சிந்திக்கும் நட்புக் குழுவை உருவாக்க வேண்டும்.

ஸ்மார்ட்டாக மாறுங்கள்:

குழந்தைகள் வளரும்போது, பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதை கிரகித்து, அதன்படியே அவர்களின் செயல்பாடுகளும் அமையும். பெற்றோரின் அத்தனை நடவடிக்கையும் குழந்தைகளின் மனதில் பதியும். எனவே, உங்கள் சிந்தனையையும், செயலையும் அதற்கேற்ப மாற்ற வேண்டும். அப்போதுதான், குழந்தைகளும் அதற்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். எதையும் குழந்தைகளிடம் கட்டளையாக இடாமல், நீங்களே முன்னுதாரணமாக நடந்து கொண்டால் குழந்தைகளும் எளிதாக அதைப் பின்பற்றுவார்கள்.
Tags:    

Similar News