குழந்தை பராமரிப்பு
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் எப்படி கையாள வேண்டும்?

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் எப்படி கையாள வேண்டும்?

Published On 2022-04-06 07:22 GMT   |   Update On 2022-04-06 07:22 GMT
சாதாரண குழந்தைகளிடம் செலுத்தும் அன்பைவிட, இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் அன்பு தேவைப்படும். அவர்களின் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள்.
ஆட்டிசம் என்பது மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த குறைபாடாகும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் பேசும் மற்றும் பழகும் திறனில் வேறுபாடு இருக்கும். ஒரே மாதிரியான செயலைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். காரணமின்றி அழுவது, சிரிப்பது, கைகளைத் தட்டுவது, குதிப்பது, விரல்கள், கைகள் மற்றும் உடலை இயல்புக்கு மாறாக அசைப்பது, கண்களைப் பார்த்து பேச முடியாதது போன்றவை ஆட்டிசத்துக்கான அறிகுறிகள்.

ஆட்டிசம் நோய் வருவதற்கான காரணம் என்ன?

ஆட்டிசம் நோய் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் கிடையாது. மரபு ரீதியாக வரலாம். மதுப்பழக்கம், கருவில் குழந்தையை சுமக்கும்போது ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம்.

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் எப்படி கையாள வேண்டும்?

குழந்தை பிறந்து பத்து மாதங்களுக்குப் பிறகே ‘ஆட்டிசம் குறைபாடு இருக்கிறதா?’ என அடையாளம் காண முடியும். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிட வேண்டும்.

சாதாரண குழந்தைகளிடம் செலுத்தும் அன்பைவிட, இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் அன்பு தேவைப்படும். அவர்களின் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள். பிறந்த மூன்று மாதங்களில் இருந்தே, குழந்தையின் கண்களைப் பார்த்து அடிக்கடி பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள்.

ஒன்பதாம் மாதத்தில் இருந்து புதிர் விளையாட்டுகள், படம் வரைதல், கட்டுமான தொகுதிகள் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்துங்கள். குழந்தைகள் சின்னச் சின்ன நல்ல விஷயங்களைச் செய்யும்போது பாராட்டுங்கள். பாராட்டு அவர்களை ஊக்குவிக்கும்.

தினமும் சிறு சிறு பயிற்சிகள் கொடுங்கள். அப்போதுதான் அவர்களின் கற்றுக்கொள்ளும் திறன் அதிகரிக்கும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்குவதில் சிரமம் இருக்கும்.

இயல்பாக உள்ள குழந்தை, பெற்றோர் உறங்கச் செல்லும்போதே தானும் உறங்கும். ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைக்கு அது தெரியாது என்பதால், தூங்குவதற்கான சூழ்நிலையை பெற்றோர் உருவாக்க வேண்டும். குழந்தையின் வாய்மொழி அல்லாத தொடர்பை நன்றாக கவனியுங்கள். குழந்தை ஏன் கத்துகிறது? எதைப் பார்த்து சிரிக்கிறது? பசி வந்தால் என்ன செய்கிறது? என்பதை கவனித்து புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சில திறமைகள் இருக்கும். அதைக் கண்காணித்து ஊக்குவிக்க வேண்டும். ‘இவர்கள் தான் என்னுடைய அம்மா-அப்பா’ என்ற புரிதல் இந்தக் குழந்தைகளுக்கு இருக்காது. அதனால் வருத்தம் கொள்ளாதீர்கள். முறையான சிகிச்சையை மேற்கொள்ளும்போது, நல்ல முன்னேற்றங்களைக் காண முடியும்.
Tags:    

Similar News