குழந்தை பராமரிப்பு
குழந்தைக்கு தாய்மொழி பற்றை வளர்ப்பதில் தாயின் பங்கு

குழந்தைக்கு தாய்மொழி பற்றை வளர்ப்பதில் தாயின் பங்கு

Published On 2022-03-03 09:47 IST   |   Update On 2022-03-03 09:47:00 IST
இன்றைய காலகட்டத்தில், தாய்மொழிக் கல்வி மூலம் தங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏதாவது நன்மைகள் கிடைக்குமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் உள்ளது.
தற்போதைய உலகமயமாக்கல் சூழலில், நமது மாணவர்கள் தாய்மொழி வழியில் கல்வி கற்பது குறைந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் விண்ணைத்தொடும் இன்றைய காலகட்டத்தில், தாய்மொழிக் கல்வி மூலம் தங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏதாவது நன்மைகள் கிடைக்குமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் உள்ளது.

தாய்மொழியில் 8 வயது வரை கல்வி பயிலும் மாணவர்கள், கற்றலில் திறன் பெற்றவர்களாக இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அந்தவகையில் ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, சீனா போன்ற வளர்ந்த நாடுகள், அவர்களது தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலமே தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த சமூக வளர்ச்சியை உருவாக்க முடியும் என்ற கருத்தை பின்பற்றி வருகின்றன.

இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் அவர்களது தாய்மொழியில் பயின்று, கண்டுபிடிப்புகளையும், இலக்கியங்களையும் படைத்துள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதனால், குழந்தையின் அடிப்படையான அறிவுத்திறனை வீட்டில் இருந்து உருவாக்கும் பொறுப்பு கொண்ட அன்னையர்கள் தாய்மொழியிலேயே தங்கள் குழந்தைகளுக்கு அறிவுசார்ந்த உலகை அறிமுகப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தாய்மொழியில் எழுதப்பட்ட இலக்கியம், அறிவியல், ஆன்மிகம், பொது அறிவு உள்ளிட்ட நூல்களை அறிமுகப்படுத்தி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை மொழிகளை அறிந்திருந்தாலும், அவரது தாய்மொழியில்தான் அவரால் சிந்திக்க இயலும். தனிமனித படைப்பாற்றலை வளமையாக்குவது தாய்மொழி கல்வியால்தான் முடியும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை அன்னையர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தாய்மொழியில் பயிலும் குழந்தையின் கற்றல் முறையில் பெற்றோர்கள், குறிப்பாக அன்னையர்கள் எளிதாக பங்கேற்க இயலும். தாய்மொழியில் கதைகள், விடுகதைகள், புதிர்கள் போன்றவற்றை சொல்வதன் மூலம் குழந்தைகளது ஆர்வத்தைத் தூண்ட முடியும். அதன் வழியாக தங்கள் குழந்தைகளுக்கு உணர்வுப்பூர்வமான நம்பிக்கையும், சுய சிந்தனையும் வளரும்.

தாய்ப்பால் பருகி வளர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வது போல, தாய்மொழியை பிரதானமாகக் கொண்டு கல்வி கற்கும் குழந்தைகள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். கற்றல், கேட்டல், எழுதுதல், பேசுதல் ஆகியவற்றில் தெளிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.

குழந்தையின் 5 வயது வரையிலான வளர்ச்சி காலகட்டத்தில், அன்னையின் நாக்கு அசைவதை வைத்தும், குரலை உணர்ந்து கொள்வதன் மூலமும் தாய் பேசும் மொழியை புரிந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் அன்னையர்கள் தங்கள் உணர்வை, அறிவுசார் வெளிப்பாடாக அமைத்துக்கொள்ள வேண்டும். தாய்மொழியில் உள்ள இலக்கிய, ஆன்மிக, நன்னெறி, பண்பாட்டு கருத்துக்களை பேசுவதன் மூலம் குழந்தைகளை கொஞ்சி மகிழலாம்.

Similar News