குழந்தை பராமரிப்பு
குழந்தைகளுக்கான தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

குழந்தைகளுக்கான தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

Update: 2022-01-17 03:12 GMT
தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மலையேறிவிட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்...
நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போய்விட்டது. அந்த காலங்களில் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மலையேறிவிட்டது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்...

1. பல்லாங்குழி

வட்டமாக குழி உள்ள பலகையில் புளியங்கொட்டை அல்லது முத்துகளை கொண்டு விளையாடும் பல்லாங்குழி மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாகும். குழந்தைகள் இந்த விளையாட்டை விளையாடுவதால் விரலுக்கு பயிற்சியும், கணக்கு பயிற்சியும் பெறமுடியும். முத்துக்களை நகர்த்தும் வேலையால் இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து, இல்லாத இடத்திற்கு கொடுக்கும் குணம் வளரும்.

2. தாயம்

இரண்டு அல்லது நான்கு பேர் இணைந்து தாயக்கட்டை மற்றும் காய்களை கொண்டு விளையாடும் விளையாட்டு தாயம் எனப்படுகிறது. ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் யார், சதுரங்க பலகையைச் சுற்றி மற்றவரின் காய்களை வெட்டி அவர்களிடம் இருந்து தப்பித்து, தனது கட்டத்தின் உச்சிக்கொம்பு ஏறி, கனி பெறுவார் என்பதே சுவாரஸ்யம் கூட்டும் அம்சமாகும். மகாபாரத காலத்தில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டதாக வரலாறு உண்டு. காய்களை வெட்டி வீழ்த்தும்போது மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் எழும், கணிதத் திறன் வலுப்பெறும். சாதுர்யம், மன ஆற்றல் மேம்படும்.

3. கண்ணாமூச்சி

குழு உணர்வையும், நட்பையும் வளர்க்கும் விதமாகக் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் மிகச் சிறந்தது கண்ணாமூச்சி.

ஒருவர் கண்ணை மூடிக்கொள்ள மற்றவர்கள் அருகில் ஒளிந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிப்பதே கண்ணாமூச்சி விளையாட்டாகும். ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதன் மூலம் பொறுமையும், நிதானத்தையும் பெறலாம். சாதுர்யத் திறனும் வளரும்.

சகிப்புத்தன்மை

இவை மட்டுமல்லாமல் கபடி, உறியடி, கோலி, நொண்டி, சில்லுக்குச்சி போன்ற ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வற்றை இன்றைய குழந்தைகள் விளையாடுவதில்லை. இவை அழியாமல் இருக்க நாம் நமது வருங்கால சந்ததியினருக்கு பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். சத்துணவு, உடற்பயிற்சி, விளையாட்டுகளினால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். விளையாட்டுகளால் ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத் தன்மை, நட்புணர்வு, உற்சாகம் போன்ற நற்பண்புகள் வளரும், பாரம்பரிய விளை யாட்டுகளை விளையாடுவோம், நற்பண்புகளையும் நற்பலன்களையும் பெறுவோம்.

Tags:    

Similar News