குழந்தை பராமரிப்பு
குழந்தை வளர்ப்பில் ஏற்பட்ட அதிசய மாற்றங்கள்

குழந்தை வளர்ப்பில் ஏற்பட்ட அதிசய மாற்றங்கள்

Published On 2021-12-27 07:38 GMT   |   Update On 2021-12-27 07:38 GMT
பொதுவான விஷயங்களில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்கள் தென்னிந்தியர்களின் குடும்ப கட்டமைப்புகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.
மக்களுடைய வாழ்க்கையில் பத்து வருடங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்று போல் அன்று அத்தனை பேரும் வீட்டிற்குள் ஆளுக்கொரு செல்போனுடன் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கவில்லை. `ஆப்'பில் ஆர்டர் செய்து ஆப்பிளை வரவழைக்கவும் இல்லை. அன்று ஓட்டலுக்கு சென்று உணவு சாப்பிடுவது என்பது தித்திப்பான மனநிலையை தந்தது. இன்று நினைத்த நேரத்தில் ஓட்டலுக்கு சென்று புசிப்பது வழக்கமாகிவிட்டது. டவுனில் இருக்கும் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பதுகூட அப்போது ஒரு திருவிழா போன்றுதான் இருந்தது. இப்போது அந்த ஆர்வத்தையும் காலம் அடித்துச்சென்றுவிட்டது. இப்படி பொதுவான விஷயங்களில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்கள் தென்னிந்தியர்களின் குடும்ப கட்டமைப்புகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.

புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியம்

`தனிக்குடித்தனத்திற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். மருமகள்களுக்கு, மாமியாரை பிடிக்காது' என்றுதான் பொதுவாக பெண்களை பற்றி சொல்வார்கள். ஆனால் இன்றைய பெண்களின் மனநிலை அதற்கு நேர்மாறாக இருந்துகொண்டிருக்கிறது. கூட்டுக்குடும்பத்தின் நிழலை பெண்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளை வளர்க்க பாட்டியும், தாத்தாவும் தேவை என்றும் சொல்கிறார்கள்.

இந்த சர்வேயில் பங்குபெற்ற இளந்தாய்மார்களில் ஒருவர் ‘‘எங்கள் குழந்தைகள் அவர்களது தாத்தா, பாட்டியுடன் வளர்வது மிக நல்லது என்பதை எங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். என் கணவர் மும்பையில் வேலைபார்க்கிறார். நான் டெல்லியில் வேலைபார்த்தபடி இரட்டைக் குழந்தைகளுடன் வசித்தேன். எங்கள் குழந்தைகளை `டே கேர்' ஒன்றில் தினமும் விட்டுவிட்டு செல்வேன். பின்பு நான் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகரீதியான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அந்த நாட்களில் மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் டே கேர் சென்று குழந்தைகளை அழைத்துவர என்னால் முடியவில்லை.

இத்தகைய நெருக்கடிகளால் எங்கள் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டது. அவர்களது அன்றாட செயல்பாடுகளிலும், சுபாவங்களிலும் மாற்றங்கள் உருவாகின. அதனால் குழந்தைகளை டே கேருக்கு அனுப்பவில்லை. எனது பெற்றோரும், எனது கணவரின் பெற்றோரும் மாறி மாறி வந்து குழந்தைகளை கவனித்துக்கொண்டார்கள். மாமனார்- மாமியார் ஒரு மாதம் வந்து தங்கியிருந்துவிட்டு சென்றதும், எனது பெற்றோர் வருவார்கள். பெரியவர்கள் வந்து குழந்தைகளை கவனிக்கத் தொடங்கியதும், குழந்தைகளிடம் நல்ல மாற்றம் உருவானது. அவர்களது குணாதிசயங்களும் மாறின. கூட்டுக் குடும்பத்தின் பெருமை இப்போதுதான் எனக்கு புரிகிறது’’ என்கிறார். சர்வேயில் பங்குபெற்ற பெரும்பாலான தம்பதிகளின் கருத்து இதுபோல்தான் இருக்கிறது.
Tags:    

Similar News