குழந்தை பராமரிப்பு
பெண் குழந்தையும்.. தோழியும்..

பெண் குழந்தையும்.. தோழியும்..

Published On 2021-12-09 06:26 GMT   |   Update On 2021-12-09 06:26 GMT
பெண் குழந்தை மூலம் தாய்க்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தோழி போல மகளிடம் பழகும்போது அவர்கள் அடையும் ஆனந்தம் அலாதியானது.
பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பாகுபாடின்றி அன்பை பொழிபவள் தாய். தன் நலன் பாராது தாய்மை உணர்வுடன் குழந்தையை வளர்க்கும் சுபாவம் பெண்மைக்கு மட்டுமே உண்டு. பெண் குழந்தைகள் தந்தையிடம் அதிக பாசமாக இருப்பார்கள் என்ற கருத்து நிலவினாலும், அவர்கள் ஒருபோதும் தாயை விட்டுக்கொடுப்பதில்லை. தாய்க்கும், மகளுக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது. பெண் குழந்தை மூலம் தாய்க்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தோழி போல மகளிடம் பழகும்போது அவர்கள் அடையும் ஆனந்தம் அலாதியானது.

* பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் பொழுதை போக்குவதற்கோ, தங்கள் உணர்வுகளை பரிமாறுவதற்கோ தோழிகள் யாரையும் தேடவேண்டியிருக்காது. துயரமான சூழலிலும், சந்தோஷமான தருணங்களிலும் மனதுக்கு பிடித்தமானவர்களை கூட தேட வேண்டிய அவசியமிருக்காது. மகளையே தோழியாக்கி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியும். சில சமயங்களில் கணவரோ, மகனோ, மற்ற குடும்ப உறுப்பினர்களோ குடும்ப தலைவியின் பேச்சுக்கோ, உணர்வுக்கோ உரிய மதிப்பளிக்காமல் போகலாம். ஆனால் மகள் அப்படியில்லை. தாயின் மன நிலையை புரிந்து கொண்டு நிச்சயமாக ஆறுதல் அளிப்பார். தாயின் பேச்சுக்களை காது கொடுத்து கேட்பார். ஆலோசனையும் வழங்குவார்.

* சிறுவயதில் கலைப்படைப்புகளின் மீது ஆர்வம் இருந்திருக்கலாம். ஆனால் குடும்ப சூழல் அதனை கற்றுக்கொண்டு அதில் சிறப்பான பங்களிப்பை வழங்க அனுமதித்திருக்காது. தனது கலை ஆர்வத்தை மகனை விட மகளிடம் எளிதில் கொண்டு சேர்த்துவிட முடியும். இந்த விஷயத்தில் ஆண்களுக்கு பொறுமையும், நிதானமும் இருக்காது. பெண்கள் அப்படியில்லை. தாயின் அருகில் இருந்து கற்றுக்கொள்வதற்கு மகள் ஆர்வம் காட்டுவார். தையல், சமையல், அலங்காரம் என எதில் ஆர்வம் இருந்தாலும், அதே ஆர்வத்தை மகளிடமும் எளிதாக புகுத்திவிட முடியும். இருவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக அதில் கவனம் செலுத்தவும் முடியும்.

* ஷாப்பிங் விஷயத்தில் பெண்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள். கணவருடனோ, மகனுடனோ ஷாப்பிங் செல்வதை விட மகளுடன் செல்வதற்குத்தான் தாய்மார்கள் விரும்புவார்கள். ஏனெனில் ஷாப்பிங் செய்யும்போது ஆண்கள் விலகியே இருப்பார்கள். தங்கள் விருப்பங்களை வெளிக்காட்டவும் மாட்டார்கள். ஆனால் மகள் தன் கருத்துக்களை தயக்கமின்றி பதிவு செய்வார். தாயுடன் மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்வார். தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை இருவரும் மன நிறைவோடு தேர்வு செய்யலாம்.

* பெண் குழந்தைகள் இருந்தால் வீடே கலகலப்பாக இருக்கும் என்பார்கள். ஓய்வு நேரத்தை இனிமையாக கழிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொள்வார்கள். மகளுடன் இணைந்து ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதனை தயக்கமின்றி செய்யலாம்.

* வெளியிடங்களுக்கு புறப்பட்டு செல்லும்போது அலங்கார விஷயத்தில் மகளின் ஒத்துழைப்பை பெறலாம். விரைவாகவே அலங்காரத்தை முடித்துவிடவும் செய்யலாம்.

* மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் நவீன பேஷன்கள் குறித்து மகளிடம் விவாதித்து தெரிந்து கொள்ளலாம்.

* புதிதாக வாங்கிய ஆடைகள் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றனவா என்பது குறித்த உண்மையான விமர்சனங்களை மகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். எந்த வகை ஆடைகள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும், எவை நன்றாக இருக்காது என்பது போன்ற விஷயங்களை மகள் தான் தயக்கமின்றி சொல்வார். ஆனால், கணவர் அல்லது மகனிடம் இக்கேள்விகளைக் கேட்டால் ‘சூப்பராக இருக்கிறது’ என்ற ஒரே பதில்தான் வரும். நிறை, குறைகளை மகளிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

Tags:    

Similar News