ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஹம்ச, ராவணாசூர வாகனங்களில் வீதிஉலா
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 11 மணியளவில் கங்காபவானியுடன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஹம்ச வாகனத்திலும், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
உடன் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், பக்த கண்ணப்பர் உலா வந்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ராஜகோபுரம் வரை கொண்டு வந்து அந்தந்த வாகனங்களில் உற்சவர்களை எழுந்தருள செய்தனர். வீதி உலா முன்னால் கோலாட்டம், நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
இதேபோல் இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் சோமசுந்தரமூர்த்தி, மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.