பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாசலபதிக்கு சந்தனகாப்பு அலங்காரம்
- மத்திய திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
- புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் இங்கு வலம்புரி ஸ்ரீமகாகணபதி, பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அக்கோவிலில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதிக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடப்பது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், சனிக்கிழமை காலையில் ஸ்வர்ணபுஷ்ப சிறப்பு சங்கல்பம் மற்றும் விசேஷ அர்ச்சனை நடைபெறும்.
அதன்படி, புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையான நேற்று வெங்கடாசலபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்ட ராமன், செயலாளர் நரசிம்மன், உப தலைவர் யுவராஜன், அறங்காவலர்கள் பழனியப்பன், செல்வம், கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.