கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்தியா வெல்லுமா? நாளை கடைசி போட்டி

Update: 2023-01-31 11:03 GMT
  • இந்திய அணியின் தொடக்கம் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக அமையவில்லை.
  • ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் நல்ல நிலையில் உள்ளனர்.

அகமதாபாத்:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இரண்டு ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை (1-ந்தேதி) நடக்கிறது.

இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் உள்ளனர்.

ஆனால் இந்திய அணியின் தொடக்கம் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர்களான சுப்மன் கில், இஷான் கிஷன் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

இதனால் அவர்கள் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் உள்ளனர்.

நியூசிலாந்து அணி பேட்டிங்கில் கான்வே, பின் ஆலென், மிட்செல், பிலிப்ஸ் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் பெர்குசன், டிக்னர், ஜேக்கப் டபி, சோதி, கேப்டன் சான்ட்னர் ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பிரேஸ்வெல் பேட்டிங், பந்து வீச்சில் அசத்த கூடியவர்.

நாளைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும்.

இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறு விறுப்பாக இருக்கும்.

Tags:    

Similar News