கிரிக்கெட்

அடுத்த டி20 உலகக்கோப்பையில் கோலி விளையாடலாம்: ரோகித் கண்டிப்பாக விளையாட மாட்டார்கள்- வாசிம் ஜாபர்

Update: 2023-02-04 06:56 GMT
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்.
  • 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடைசியாக கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்தது.

புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா.

சமீபகாலமாக இவர்கள் இருவருக்கும் 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் இளம் வீரர்களை உருவாக்கும் வகையில் இவர்களை ஓரம் கட்ட கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி கூட விளையாட வாய்ப்பு இருக்கு ஆனால் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என்று முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டது. 20 ஓவர் போட்டியில் அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும். விராட் கோலி விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பு இல்லை. அவர் 36 வயதை தொட்டு விட்டார் என நினைக்கிறேன். மேலும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இளம் அணி உருவாக்கப்படும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும். அந்த அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இவ்வாறு வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி கடைசியாக கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2024-ம் ஆண்டு அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதற்காக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் அணியை உருவாக்கும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாகவே ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு 20 ஓவரில் ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருக்கிறார். 20 ஓவருக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக உள்ளார்.

20 ஓவர் போட்டியில் விராட் கோலி 4008 ரன்னும் (114 போட்டி), ரோகித் சர்மா 3853 ரன்னும் (148 ஆட்டம்) எடுத்து சர்வதேச அளவில் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

Tags:    

Similar News