கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் பெங்களூரு அணி சென்னை வந்தது

Published On 2024-03-20 11:40 IST   |   Update On 2024-03-20 11:40:00 IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
  • ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக விராட்கோலி இருக்கிறார்.

சென்னை:

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சி.எஸ்.கே. கேப்டன் டோனி கடந்த 5-ந்தேதியே சென்னை வந்துவிட்டார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். தொடக்க போட்டியில் விளையாடுவதற்காக டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர். விமான நிலையத்தில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு 2-வது குழந்தை பிறந்ததால் விளையாடவில்லை. ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதற்காக அவர் பெங்களூர் வந்து அணியோடு இணைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் விராட்கோலியை பார்த்து ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர். அவர்கள் கோலி...கோலி... என்று உற்சாகமாக கோஷங்களை எழுப்பினார்கள்.

ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக விராட்கோலி இருக்கிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஆர்.சி.பி. அணியின் பெயர் இந்த சீசனில் மாற்றப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்பதற்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று இனி அழைக்கப்படும்.

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 1 மணி நேரம் கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் நடக்கிறது.

ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் கலைஞர்களின் நடனமும் இடம் பெறுகிறது. பிரபல இந்தி நடிகர்களான அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் ரசிகர்களை குதூகலப்படுத்த இருக்கிறார்கள். பாடகர் சோனு நிகாம் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

ஐ.பி.எல். தொடக்க போட்டிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனையானது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் முடங்கியதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News