கிரிக்கெட்

ஆல் ரவுண்டராக புதிய சாதனை படைத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்

Published On 2023-01-28 09:32 GMT   |   Update On 2023-01-28 09:32 GMT
  • வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
  • டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்த அணியின் வெற்றிக்காக போராடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி வீரர்கள் யாரும் படைத்திடாத தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதிலும் குறிப்பாக 5-வது ஓவரில் மிரட்டலை கொடுத்த பின் ஆலனை 35 (23) ரன்களில் அவுட்டாக்கிய அவர் அடுத்து வந்த மார்க் சாப்மேன் கொடுத்த கேட்ச்சை சூப்பர் மேன் போல தாவி பிடித்து டக் அவுட்டாக்கினார். அத்துடன் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் வெறித்தனமாக போராடிய அவர் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

இதற்கு முன் தனது கேரியரில் 12 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வெறும் 47 ரன்கள் மட்டும் எடுத்த அவர் இந்த ஒரே போட்டியில் 50 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார். அதை விட இப்போட்டியில் மொத்தமாக 2 விக்கெட், 1 கேட்ச், 50 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்தது 50 ரன்கள், 1 விக்கெட், 1 கேட்ச் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வேறு எந்த இந்திய வீரரும் இப்படி ஒரு சாதனையை படைத்ததே கிடையாது. இதுவரை ஜடேஜா கேரியரில் அரை சதம் அடித்ததில்லை. அதே போல் பேட்டிங் பந்து வீச்சில் அசத்தினாலும் யுவராஜ் சிங், பாண்டியா ஆகியோர் இதற்கு முன் கேட்ச் பிடித்ததில்லை. அந்த வகையில் வாஷிங்டன் சுந்தரை நினைத்து தமிழக ரசிகர்கள் மிகவும் பெருமை அடைகிறார்கள்.

Tags:    

Similar News