எக்ஸ் தளத்தில் தனக்கு எந்த கணக்குகளும் இல்லை- சாரா டெண்டுல்கர் விளக்கம்
- இணையத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையிலிருந்து தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
- எக்ஸ் தளம் அத்தகைய கணக்குகளைப் பார்த்து அவற்றை இடைநிறுத்தும் என்று நம்புகிறேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் ஆவார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர். இவரது புகைப்படத்துக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் வருவதுண்டு. இவரை இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் இணைத்து பல செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது எக்ஸ் தளத்தில் சாரா பெயரில் இருந்து கில்லுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் பெயரில் போலிக்கணக்குகள் தொடங்கி பணம் செலுத்தி ப்ளு டிக் பெற்று சர்ச்சை பதிவுகள் வந்தது.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் தனக்கு எந்தவித கணக்கு இல்லை என சாரா, இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சமூக ஊடகங்கள் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, துக்கம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ள ஒரு அற்புதமான இடம். இருப்பினும், இணையத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையிலிருந்து தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
எக்ஸ் தளத்தில் என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் இது மாதிரியான போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் என்னிடம் கணக்கு இல்லை. மேலும் எக்ஸ் அத்தகைய கணக்குகளைப் பார்த்து அவற்றை இடைநிறுத்தும் என்று நம்புகிறேன்.
என்று அவர் வலியுறுத்தினார்.