கிரிக்கெட்

கடைசி கட்டத்தில் நிறைய ரன்களை கொடுத்து விட்டோம்- தோல்வி குறித்து ரிஷப்பண்ட் கருத்து

Published On 2024-03-29 05:38 GMT   |   Update On 2024-03-29 05:38 GMT
  • நார்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீச வைக்க விரும்பினோம். ஆனால் அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை.
  • இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது.

ஜெய்ப்பூர்:

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. ரியான் பராக் 45 பந்தில் 85 ரன்கள் எடுத்தார்.

பின்னர் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்களே எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஆவேஷ்கான் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.

ராஜஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது. டெல்லி அணி 2-வது தோல்வியை சந்தித்தது.

தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது. 16 ஓவர்கள் வரை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் கடைசி கட்டத்தில் நிறைய ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். பேட்டிங்கில் வார்னர்-மிட்செல் மார்ஷ் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் அதை பயன்படுத்தி கொள்ள தவறி விட்டோம்.

நார்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீச வைக்க விரும்பினோம். ஆனால் அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நார்ஜே வீசிய கடைசி ஓவரில் ரியான்பராக் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 25 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News