கிரிக்கெட்

முதல் டெஸ்ட்டில் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? இந்தியா-ஆஸ்திரேலியா நாக்பூரில் நாளை மோதல்

Published On 2023-02-08 11:49 GMT   |   Update On 2023-02-08 11:49 GMT
  • ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது.
  • அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாக்பூர்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை ( 9-ந் தேதி ) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நிர்ணயம் செய்வதால் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருந்தது. இதே போல ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை 2-0 (3 டெஸ்ட் தொடர் ) என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

வங்காளதேச தொடரில் ஆடாத கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் கடும் சவாலாக இருக்கும். சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும்.

ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. இதனால் நம்பிக்கையுடன் அந்த அணியை இந்தியா எதிர்கொள்ளும்.

இந்திய அணியின் பலமாக சுழற்பந்து வீச்சு உள்ளது. அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நல்ல நிலையில் உள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் சமீபத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பந்து வீச்சில் அசத்தி இருந்தார். இதனால் ஜடேஜா நம்பிக்கையுடன் களம் இறங்குவார்.

3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் இடையே போட்டி நிலவுகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெறுவார்கள். மேலும் உமேஷ் யாதவ், ஜெய்தேவ், உனத்கட் ஆகியோர் உள்ளனர்.

பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா, சுப்மன்கில், லோகேஷ் ராகுல், சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் உள்ளனர். ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறங்குவார் என தெரிகிறது.

இந்தியா டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற இப்போட்டி தொடர் முக்கியமானது என்பதால் வெற்றிக்காக இந்தியா போராடும். சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி சம பலம் வாய்ந்ததாக உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் டேவிட் வார்னர், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், கவாஜா, டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹன்ஸ்கோம்ப், மேட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். நாதன் லயன், ஆஸ்டன் அகர், மிட்செல் ஸ்வெப்சன், டாட் மர்பி ஆகியோர் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் மோரீஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் உள்ளனர்.

19 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மன்கில், புஜாரா, விராட்கோலி, லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், ஸ்ரீகர் பரத்

ஆஸ்திரேலியா: கம்மின்ஸ் (கேப்டன்) டேவிட் வார்னர், கவாஜா, ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேன்ஸ்கோம்ப், மேட்ரென்ஷா, ஆஸ்டன் ஆகர், நாதன் லயன், அலெக்ஸ் கேரி, டாட் மர்பி, ஸ்வெப்சன், மோரிஸ், ஸ்காட் போலண்ட்.

Tags:    

Similar News