கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்த அணிக்கே வாய்ப்பு அதிகம்- ரவிசாஸ்திரி

Published On 2023-11-28 09:30 GMT   |   Update On 2023-11-28 09:30 GMT
  • அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ்- அமெரிக்காவில் நடக்கிறது.
  • 20 ஓவர் கிரிக்கெட் வடிவில் இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கிறது.

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றதால் இதயமே நொறுங்கி போய்விட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வலிமையான அணியாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது இன்னும் வேதனையாக உள்ளது. ஆனால் நமது வீரர்கள் அதில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்ல வேண்டும். இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விரைவில் பார்க்கப்போகிறேன். அது 50 ஓவர் உலகக் கோப்பையாக இருப்பது கடினம். ஏனெனில் இதற்கு அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டும்.

ஆனால் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்- அமெரிக்காவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பட்டம் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. ஏனெனில் 20 ஓவர் கிரிக்கெட் வடிவில் இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கிறது. எனவே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கடுமையான போட்டியாளராக இருக்கும்' என்றார்.

மேலும் ரவிசாஸ்திரி, 'உலகக் கோப்பையை எளிதில் வென்று விட முடியாது. இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒரு உலகக் கோப்பையை கையில் ஏந்த 6 உலகக் கோப்பை தொடர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. உலகக் கோப்பையை வெல்ல இறுதிப்போட்டிக்குரிய நாள் சிறப்பாக அமைய வேண்டும். இறுதிப்போட்டிக்கு முன்பாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படாது' என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News