கிரிக்கெட்

ஆடவர் மற்றும் மகளிர் டி20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை படைக்கும் ஹர்மன்பிரீத் கவுர்

Published On 2023-02-20 12:31 GMT   |   Update On 2023-02-20 12:31 GMT
  • மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
  • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி, வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. விதிகளின்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இந்திய மகளிர் அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இதில், இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். எனவே, இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும்.

இந்தநிலையில், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதன் மூலம் டி20 போட்டிகளில் முக்கிய உலக சாதனையை படைக்க இருக்கிறார்.

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கவுர் தனது 149-வது போட்டியில் களமிறங்கினார். தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றைய அயர்லாந்து அணிக்கு எதிராக கவுர், தனது 150வது டி20 போட்டியில் களமிறங்குகிறார். இதன்மூலம், ஒட்டுமொத்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் 150 டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீராங்கனை என்ற பெருமையை படைக்க இருக்கிறார்.

மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

2023 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கி தனது முதல் தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து, அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றால் நிச்சயம் அரையிறுதிக்கு தகுதிபெறும். அதற்காக, கவுர் தலைமையிலான இந்திய அணி நிச்சயம் போராடும். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு க்கெபெர்ஹா ,செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News