கிரிக்கெட்

தோல்வி கசப்பான மாத்திரை போல் இருக்கிறது- ஷ்ரேயாஸ் அய்யர் புலம்பல்

Published On 2024-04-17 07:30 GMT   |   Update On 2024-04-17 07:30 GMT
  • பரபரப்பான இந்த போட்டியில் வீரர்களின் உணர்ச்சி தருணங்கள் மாறி மாறி இருந்தன.
  • கிரிக்கெட் உண்மையிலேயே கணிக்க முடியாத விளையாட்டாகும்.

கொல்கத்தா:

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 224 ரன் இலக்கை எடுத்து ராஜஸ்தான் சாதனை வெற்றியை பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன் என்ற இமாலய இலக்கு இருந்தது.

சுனில் நரைன் 56 பந்தில் 109 ரன்னும் (13 பவுண்டரி, 6 சிக்சர்), ரகுவன்ஷி 18 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். அவேஷ்கான், குல்தீப் சென் தலா 2 விக்கெட்டும், போல்ட், யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி பந்தில் வெற்றி பெற்று சாதித்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 60 பந்தில் 107 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ரியான் பராக் 14 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), போவெல் 13 பந்தில் 23 ரன்னும் (1 பவுண்டரி 3 சிக்சர்) எடுத்தனர். ஹர்சித் ரானா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

224 ரன் இலக்கை எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் தனது சாதனையை சமன் செய்தது. 2020-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான் 224 ரன் இலக்கை எட்டி பிடித்து சாதனை புரிந்து இருந்தது. அதை நேற்று சமன் செய்தது.

ராஜஸ்தான் அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

பட்லர் ஒரு சிறப்பான வீரர். அவர் களத்தில் இருக்கும் போது எந்த ஒரு இலக்கும் பாதுகாப்பாக இருக்காது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

6-வது விக்கெட் விழுந்த பிறகு ரோமன் போவல் உள்ளே வந்து அடுத்தடுத்து 2 சிக்சர்கள் அடித்ததும் நாங்கள் இன்னும் ஆட்டத்தில் இருப்பது போல உணர்ந்தோம். அவர் ஆட்டம் இழந்த பிறகு ஜோஸ் பட்லர் அதிரடியை வெளிப்படுத்தினார். எங்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது.

இது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த பிட்ச் அவர்களுக்கு பொருத்தமாக இருந்தது.

ஜோஸ் பட்லர் கடந்த 6-7 ஆண்டுகள் செய்ததை தொடர்ந்து செய்துள்ளார். தொடக்க வீரரான அவர் 20 ஓவர் வரை பேட்டிங் செய்தால் எந்த ரன் இலக்கையும் எடுத்து விடுவார். டக் அவுட்டும் ஆவார். கடைசி வரை நின்று வெற்றியும் பெற வைப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா அணி 2-வது தோல்வியை தழுவியது. 223 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் தோற்றதால் அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஏமாற்றம் அடைந்துள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. கசப்பான மாத்திரை போல் இருக்கிறது. பரபரப்பான இந்த போட்டியில் வீரர்களின் உணர்ச்சி தருணங்கள் மாறி மாறி இருந்தன. இந்த நிலை ஏற்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கிரிக்கெட் உண்மையிலேயே கணிக்க முடியாத விளையாட்டாகும்.

இந்த ஆட்டத்தில் நாங்கள் சரியான முறையில் தான் பந்து வீசினோம். கொஞ்சம் தவறினால் கூட பேட்ஸ்மேன்கள் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்பி விடுகிறார்கள்.

நல்ல வேளையாக இந்த தோல்வி எங்களுக்கு இப்போதே கிடைத்து விட்டது. முக்கியமான நேரத்தில் தோல்வி அடைந்திருந்தால் அது கடினமாக இருக்கும். தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டு வலுவாக மீண்டு வருவது முக்கியம்.

சுனில் நரைன் கொல்கத்தா அணியின் விலை மதிக்க முடியாத சொத்து. அவரால் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News