சினிமா

சர்கார் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-10-30 06:58 GMT   |   Update On 2018-10-30 06:58 GMT
சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதால் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay
நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள `சர்கார்' என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும், வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.



இந்த நிலையில், சர்கார் படத்தின் மீதான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை காண இயக்குநர் பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக முருகதாஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் படத்தின் டைட்டில் கார்டில் தனது பெயருடன் நன்றி மற்றும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் மனுவில் கூறியிருந்தார். 



இந்த நிலையில், வருணின் கோரிக்கையை சர்கார் படக்குழு ஏற்றுக் கொண்டதால், இரு தரப்பினரும் சமரச முடிவுக்கு வந்தனர். இதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி சுந்தர் தெரிவித்தார். மேலும் சர்கார் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்த நிலையில், வருண் ராஜேந்திரனின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பித்தக்கது. #Sarkar #Vijay #ARMurugadoss

Tags:    

Similar News