தனுஷ் உடனான மோதலில் நயன்தாராவுக்கு ஆதரவு தந்த பார்வதி...பின்னணியில் 'மரியான்'-ன் கசப்பான அனுபவங்கள்?
- மாதவிடாய் எனக்கூறியும் உடை மாற்ற அனுமதிக்கவில்லை
- நயன்தாரா ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டை முன்வைக்கமாட்டார்
மரியான் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை பார்வதி திருவோத்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 'இன்னும் கொஞ்ச நேரம்' பாடல் காட்சிக்காக கடலில் நீண்ட நேரம் நனைந்தபடி நடித்தபோது, உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை என்றும், அந்தச் சமயத்தில் தான் மாதவிடாய் காலத்தில் இருந்ததால் மிகுந்த அவதிக்குள்ளானதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தப் படப்பிடிப்பு தளத்தில் மூன்றே பெண்கள் மட்டுமே இருந்ததாகவும், மாதவிடாய் எனக்கூறியும் உதவியற்ற நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 'மலையாள படப்பிடிப்பு தளத்திலும் இப்படித்தான் இருக்கும். குறைவான அளவே பெண்கள் இருப்பார்கள். அதனால் எந்த படப்பிடிப்பு தளத்திலாவது பெண்களை அதிகம் பார்த்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துவிடுவேன்' என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது ஆவணப்படத்திற்காக தனுஷிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து நயன்தாரா வெளியிட்ட திறந்த கடிதத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த நடிகைகளில் முக்கியமான ஒருவர் பார்வதி திருவோத்து. இந்த ஆதரவு தொடர்பாக அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டபோது நயன்தாராவைப் போன்ற ஒரு சுய ஆளுமை திறன்கொண்டவர்கள் ஆதாரமின்றி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
தனுஷ், பார்வதி திருவோத்து நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் மரியான். பரத் பாலா இப்படத்தை இயக்கியிருந்தார்.