ஆன்மிக களஞ்சியம்

மண் சட்டியில் நிவேதனம்

Published On 2023-09-21 11:34 GMT   |   Update On 2023-09-21 11:34 GMT
  • படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.
  • பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.

பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில்.

இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார்.

இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.

ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது.

போனாலும் பூஜை முறையும் தெரியாது.

தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை.

பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார்.

படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார்.

பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது.

எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.

ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார்.

பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.

பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார்.

அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார்.

அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார்.

அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார்.

பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார்.

அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.

இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

Tags:    

Similar News